தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முகப்பு



viii

புறநானூறு
 

முதற்பகுதியிற் போல இவ் விரண்டாம் பகுதியிலும் ஒவ்வொரு
பாட்டுக்கும், பாடினோர், பாடப்பட்டோர் வரலாறு, பாட்டின் கருத்து, உரை,
உரைவிளக்கம் ஆகியவை தரப்பெற்றுள்ளன. பாட வேறுபாடுகளும்
அவற்றைப்பற்றிய குறிப்புகளும் அவ்வப்பாட்டின் உரை விளக்கம் முதலிய
பகுதிகளில் குறிக்கப்பெற்றிருக்கின்றன. சங்கச் சான்றோர்களைப்பற்றிக்
கிடைத்தவரலாற்றுக் குறிப்புகட்கேற்ற ஆதரவு நல்கும் கல்வெட்டு முதலிய
சான்றுகள் விடாமல் ஆங்காங்கே காட்டப்பட்டுள்ளன. பாடப்பட்டோர்
பெயர் தெரியாவிடத்துப் பாடினோர் பெயரும், இருவர் பெயரும்
புலப்படாதவழிப் புறத்துறைப் பெயரும் பாட்டுக்களுக்குத் தலைப்பாக
இப்பகுதியில் தரப்பெற்றுள்ளன. இன்னும் எத்தனையோ பல கல்வெட்டுகளும்
(Inscriptions) செப்பேடுகளும் (Copper plate grants) பழந்தமிழ் நூல்களும்
வெளிவராமல், தெளிவின்மை, பற்றின்மை, பொருளின்மை உள்ளமின்மை
முதலிய மையிருட்பிழம்பில் புதைந்து மறைந்து கிடத்தலால், இந்நூற்கண்
காணப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளை முடிந்த முடிபாகக் கோடற்கு
இடமில்லை; ஆயினும், அவை முழுதும் வெளியாகுங்காறும் இக் குறிப்புகளை
மேற்கொள்வது அறிஞர்கட்குத் தவறாகாது.

“பாழான இந்தப் பழந்தமிழ் ஏடுகளைத் தேடித் திரிந்து ஆராயந்து
கழித்த உங்கள் காலத்தை B.O.L., M.O.L. என்ற பட்டங்களைப்
பெறுவதற்குக் கழித்திருந்தால் உங்களது வாழ்க்கை, பொருள்நிலையில்
மிக்க சிறப்புபெற்றிருக்கும்,” என்று என் நண்பரொருவர் என் சங்கநூல்
வெளியீடுகளை நோக்கி என்பால் கொண்ட உண்மையன்பினால் கழறிக்
கூறினார். பொருள்நிலை நோக்கி அவர் கூறிய பொருளுரை உண்மையுரையே;
அதனை எண்ணி ஒருகால் உள்ளம் அலையினும் பிற எக்காலத்தும் இந்த
இனிய தமிழ்ப்பணியிலே அதனை உறைப்புற்று நிற்பித்து இதனை இவ்வளவில்
முற்றுவித்த தமிழ்த்தாயின் தண்ணிய திருவருளையே வியந்து பரவுகின்றேன்.

யான் செய்து போந்த ஆராய்ச்சிகட்கு வேண்டும்போதெல்லாம்
அறிவுத்துணையும் ஊக்கமும் காட்டி இன்புறுத்திய பேரறிஞர்களும்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சித் துறை
விரிவுரையாளர்களுமான திரு. T. V. சதாசிவபண்டாரத்தார், திரு.
வெள்ளைவாரணனார் ஆகிய திருவாளர்களுடைய அன்பும் நன்றியும் என்
நெஞ்சில் என்றும் நின்று நிலவுகின்றன. ஞாமாமிர்த ஏடு, நற்றிணையேடு
முதலிய ஏடுகளை உடனிருந்து ஒப்புநோக்கற் கண்ணும், புறநானூற்றுப் பாட
வேறுபாடுகளை ஆராயுமிடத்தும், கல்வெட்டுக் குறிப்புகளைத் தெளியுங்காலும்
என் இனிய நண்பர் திரு. வெள்ளைவாரணனாம் அவர்கள் செய்த உதவி
நினைத்தொறும் அறிவுக்கு இன்பந்தரும் நீர்மையதாகும்.

இவ் வுரைநூலுக்கு இனிய முகவுரை எழுதிச் சிறப்பிக்கும்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் திரு. டாக்டர்.
அ.சிதம்பரநாத செட்டியார் அவர்களது



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 03:35:35(இந்திய நேரம்)