தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முகப்பு



முன்னுரை

ix


நுண்மாண்புலமை நலமும் சிறந்த ஆராய்ச்சித் திறமும் தமிழுலகு
அறிந்து பாராட்டி இன்புறுகின்றது. அவர்கள் தங்கட்குள்ள பல
அலுவல்கட்கிடையே இவ்வுரையினை அன்பு கூர்ந்து ஆராய்ந்து அழகிய
அணிந்துரை தந்து சிறப்பித்தது நினைந்து அவர்கட்கு என் மனம் கெழுமிய
நன்றி உரியதாகின்றது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து பணிபுரிந் தொழுகிய
எனக்குப் பல நல்ல வசதியினைச் செய்து என் தமிழ்ப்பணிக்கு வேண்டும்
ஆதரவும் அன்பும் நல்கும் ‘மதுரை மீனாக்ஷி மில்ஸ்’ உரிமையாளர்
பெருந்தமிழ்ச் சைவ வள்ளல் உயர்திரு. கரு. முத்து, தியாகராச செட்டியார்
அவர்களது பெருநலம் புலவர் பாடும் புகழுடையதாகும்.

எளிது இனிது விரைவில் விலையாகிப் பேரூதியம் தரும் துறையே
நினைந்து மாணவர் பயிலும் பள்ளிகட்குரிய பாடப்புத்தக வெளியீட்டிலே
இன்றைய புத்தக வெளியீட்டு வாணிகருலகு பேரூக்கமும் கருத்தும் கொண்டு
இயங்குதலால், இவ் வுரைநூல் போலும் பெருநூல்களை வெளியிடற்கு
இடமில்லாதிருக்கவும், “இவற்றை வெளியிடுவதற்கும் யாம் அஞ்சோம்” என்ற
மனத்திண்மை கொண்டு தளராது தவிராது பெருநூல் வெளியீடுகளால் உயர்ந்து
நிற்கும் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இதனை
அழகுற அச்சிட்டு வெளியிடுவது குறித்துத் தமிழுலகம் அவர்கட்கு என்றும்
நன்றி பாராட்டும் கடமையுடையது.

பரந்த புலமையும் சிறந்த செல்வாக்கும் நிறைந்த ஆதரவுமுடைய தக்கோர்
செய்தற்குரிய இத் தமிழ்ப் பெரும்பணியில் ஒரு தகுதியும் இல்லாத என்னையும்
ஈடுபடுத்தி ஆட்கொண்டருளும் அங்கயற் கண்ணியொடு ஆலவாய் அமர்ந்த
சொக்கப்பெருமான் திருவடிகள் எக்காலும் என் நெஞ்சினின்றும் நீங்காது
நிலவுக என என் மனமொழி மெய்களாற் பரவுகின்றேன்.

“ஞாலம் நின்புக ழேமிக வேண்டும்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே”


மதுரை ஒளவை சு. துரைசாமி.
22.8.1951



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-02-2019 19:40:01(இந்திய நேரம்)