தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai

ஆராய்ச்சிக்குரிய பொருளதிகாரப் பாகுபாடும், வெவ்வேறு நூலன வென்றும் வெவ்வேறு பயனோக்கியனவென்றும் அறிந்துகொள்க. மூன்றன் பகுதியாவது அறத்தாற் பொருளீட்டி அப்பொருளால் இன்பம் நுகர்வேன் எனல். இதனால் அறநூற்பாகுபாடு தமிழரதே என்று தெளிக.

தமிழ நாகரிகத்தின் சிறந்த கூறுகளையெல்லாம் தழுவிக் கொண்டு அவற்றைத் தமவெனக் கூறல், ஆரியரின் தொன்று தொட்ட வழக்கமே. அறம்பொருளின்பம் வீடெனத் தமிழற நூலார் வகுத்த பொருட்பாகுபாட்டையே இலக்கண நூலார் இன்பம் அகமென்றும் ஏனை மூன்றும் அஃதல்லாத புறமென்றும் இரண்டுள் அடக்கி மாற்றி வகுத்தனர் என்க. இதையுணர்த்தற்கே

"இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

  ............................................................

காமக் கூட்டங் காணுங் காலை" என்று தொல்காப்பியங் கூறியதும் என அறிக. முழுத் தமிழிலக்கணந் தோன்றியது தலைக்கழகக் காலம் (கி. மு. 10,000). அது தோன்றிய போதே முத்தமிழாகத் தோன்றிற்று. அவற்றுள் அடிப்படையான இயற்றமிழ் இலக்கணமும் மூவதிகாரப் பிண்டமாகவே தோன்றிற்று. இதனால் பொருளதிகார அகப்புறப் பொருட்பாகுபாட்டிற்கு மூலமான அற நூற்பொருட்பாகுபாடு, தலைக்கழகத்திற்கும் முந்தியதென அறிக. அது ஆரியம் என்னும் பேரும் இனமுந் தோன்றாத முதுபண்டைக் காலம். அகம் புறம் என்பதே தமிழர் பொருட்பாகுபாடென்பது, பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழில் என்பதே தமிழர் பொருட் பாகுபாடென்பது போன்றதே.

4. திருவள்ளுவர் வரலாறு

பெயர் : இவர் பெயர் வள்ளுவன் என்பதே. வள்ளுவர் என்பது உயர்வுப் பன்மை. இவரது இறைப்பற்றொடு கூடிய ஒழுக்கத்தின் உயர்வும் இவர் நூலின் மறைத் தன்மையும், இவருக்குத் திருமை (தெய்வத்தன்மை) யுண்டாக்கியதினால், இவர் பெயர்க்குமுன் திரு என்னும் அடைமொழி சேர்க்கப்பெற்றது, தெய்வப் புலவர், பொய்யில் புலவர், முதற்பாவலர், பெருநாவலர், செந்நாப் போதார், நாயனார் முதலிய பிற பெயர்களெல்லாம், இவரைப் பாராட்டிக்கூறிய புலவர் ஆண்ட புகழ்ச் சொற்களேயன்றி வேறல்ல.

வள்ளுவன் என்பது இயற்பெயராகவுமிருக்கலாம்; தொழில் பற்றிய பெயராகவுமிருக்கலாம். திருவள்ளுவர் பெயர் இவற்றுட் பின்னதென்பதே பெரும்பான்மைப் பொருத்தமாம்.
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:04:38(இந்திய நேரம்)