தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai

வள்ளுவன் என்பான், அரசன் கட்டளையைப் பறையறைந்து அறிவிப்பவன் என்று பெருங்கதையும், அரசர்க்கு உள்படு கருமத் தலைவன் என்று பிங்கல நிகண்டும், புள்ளுவன் (நிமித்திகன்) என்று சீவகசிந்தாமணியும், கூறுகின்றன.

வள் என்னும் அடிச்சொற்குள்ள பலபொருள்களுள் மூன்று, கூர்மை வலிமை வண்மை என்பன. ஆதலால் , வள்ளுவன் என்னும் சொற்கு, கூர்மதியன், வல்லவன், வள்ளியோன் என்று முப்பொருள் கொள்ளலாம்.

"ஏற்றுரி போர்த்த விடியுறழ் தழங்குகுரற்
கோற்றொழில் வேந்தன் கொற்ற முரசம்
பெரும்பணைக் கொட்டிலு ளரும்பலி யோச்சி
முற்றவை காட்டிக் கொற்றவை பழிச்சித்
திருநாள் படைநாள் கடிநா ளென்றிப்
பெருநாட் கல்லது பிறநாட் கறையாச்
செல்வச் சேனை வள்ளுவ முதுமகன்"

என்று பெருங்கதை ( 2;28-33) கூறுவதால், வேத்தியல் விளம்பர அதிகாரியான வள்ளுவன் பெருமை விளங்கும். (முதுமகன் முப்ப தாண்டிற்கு மேற்பட்டவன்.) . இவனையே பிங்கல நிகண்டு,

"வள்ளுவன் சாக்கை யெனும்பெயர் மன்னர்க்
குள்படு கருமத் தலைவர்க் கொன்றும்." 

(5;118) 

என்று உள்படுகருமத் தலைவருள் ஒருவனாகக் குறிக்கும். வள்ளுவன் அரசன் கட்டளையையே முரசறைந் தறிவிப்பவன்; சாக்கையன் அரசர்க்கே நாடகம் நடிப்பவன். ஆதலால் இவ்விருவரும் அரசர் தொடர்பே கொண்ட அரண்மனைப் பணியாளராவர். சிலர் கருதுகின்றவாறு, வள்ளுவன் அரசன் பள்ளியறைக் கண்காணிப்பாளனான மாளிகை நாயகம் ( Chamberlain) அல்லன்.

பெருங்கணி குறித்த நன்னாளிலேயே வள்ளுவன் பறையறைய வேண்டியிருந்ததினாலும், வள்ளுவனைப் புள் (நிமித்தம்) அறிவிப்பவன் என்றும் சிந்தாமணி கூறுவதனாலும், வள்ளுவர் என்பார் இன்றும் கணியராயிருந்து வருவதனாலும், பண்டை வள்ளுவனும் கணியம் அறிந்தவனே என்று கருத இடமுண்டு. நாள்கோள்களின் இயக்கத்தை யறிந்து ஐந்திறம் ( பஞ்சாங்கம் ) வகுத்தற்கும் அரசர்க்குப் பிறப்பியம் (சாதகம்) எழுதுதற்கும் நுண்மாண் நுழைமதி வேண்டியிருத்தலின், கணியருள் ஒரு பிரிவார் வள்ளுவர் எனப்பட்டதாகத் தெரிகின்றது.
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:04:48(இந்திய நேரம்)