தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai

குறவர் கோமான் கொய்தினைப் புனஞ்சூழ்
வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள்
தொண்டை மண்டலத்தில் வண்டமிழ் மயிலைப்
பறைய ரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர்
அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சி
அதிக னில்லிடை அதிகமான் வளர்ந்தனன்
பாரூர் நீர்நாட் டாரூர் தன்னில்
அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்.

என்பது கபிலர் அகவல் (99-119)

இதன் புரைமையையும் பொருந்தாமையையும் அறிஞர் அறிந்து கொள்க.

மனைவியார் : திருவள்ளுவர் மனைவியார் வாசுகி யென்னும் பெயர் கொண்ட கற்பரசியார் என்னும், மார்க்க சகாயர் என்னும் வேளாளரின் மகளார் என்றும், அவ்வேளாளர் செய்த பயிர்பச்சைகளைத் தாக்கிய நோயைத் திருவள்ளுவர் நீக்கியதால் அவர் தம் மகட்கொடையைப் பெற்றாரென்றும், அவ்வம்மையாரை மணக்குமுன்பே அவர் செய்த ஒர் இறும்பூதுச் செயலால் அவர்கற்பைத் திருவள்ளுவர் கண்டாரென்றும், நீண்ட கால வரலாறு வழங்கிவருகின்றது. இதில் நம்பத்தகாதது ஒன்றுமில்லை. இறும்பூதுச் செயல் கற்பினாலும் நிகழலாம்; இறைவன் அருளிய ஈவினாலும் நிகழலாம்; இன்றும் சோழநாட்டு மருதூரிலுள்ள நெசவுத்தொழில் செய்யும் தெய்வயானையம்மையார் பற்பல இறும்பூதுகள் செய்துவருவதாக, புலவர் மறைத்திருநாவுக்கரசர் எழுதிய மறைமலையடிகள் வரலாற்றில் வரையப்பெற்றிருத்தல் காண்க.

நாகன்-நாகி என்பன ஆண்பாற் பெண்பாற் பெயர்களாகத் தமிழர்க்குத் தொன்று தொட்டு இடப்பட்டு வருவதனாலும் வாசுகி என்பது வடமொழித் தொல்கதைப்படி ஒரு பாம்பின் பெயராய் இருத்தலாலும் திருவள்ளுவர் மனைவியாரின் பெயர் ஒருகால் நாகி என்று இருந்திருக்கலாம் என்று மறைமலையடிகள் கருதுவர்.

நல்கூர்வேள்வியார் என்னும் புலவர் பெயரிலுள்ள திருள்ளுவ மாலைப்பாவில் மாதாநுபங்கி யென்றிருக்குஞ்சொல், தாய்போலொழுகுபவள் என்று பொருள்படலாமேயன்றி, வள்ளுவரின் மனைவியார் பேராயிருந்திருக்க முடியாது.

மக்கள் : திருவள்ளுவர்க்கு மக்கள் இருந்ததாகத் தெரியவில்லை.

தொழில் : திருவள்ளுவர் தம் நூலியற்றுமுன் பாண்டியனின் முரசறை விளம்பர அதிகாரியாய் இருந்திருக்கலாம். பல்துறைப் பன்னூல்களைக் கற்கவும் அரசியல் வினைகளை நெருங்கியறியவும் அது மிகுந்த வாய்ப்பளித்திருக்கும். அவர் நூல் ஆரியத்தை வன்மையாகக் கண்டிப்பதால், அது இயற்றப்பெற்றபின் பிராமணர் கிளர்ச்சியாலும்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:06:07(இந்திய நேரம்)