தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai-திருக்குறட் சிறப்பு

8. திருக்குறட் சிறப்பு

உலகியல் இனிது நடைபெறுதற்கு இன்றியமையாத நால் நிலைமையும் இல்லறமுந் துறவறமும் அரசியலும் கணவன் மனைவியர் காமவின்பமும் பற்றி, உண்மையாகவும் நடுநிலைமையாகவும் எல்லார்க்கும் ஒப்ப முடிந்த வகையிலும், தலைசிறந்த பாவாலும் சிறந்த சொற்களாலும் இலக்கண வழுவின்றி இருவகை யணிகளுடன், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் நூல் திருக்குறள் ஒன்றே. இருமைக்கும் உதவும் விழுமிய பொருளை அணிமிக்க குறள்வெண்பாவாற் பாடியிருப்பது, பன்மணிபதித்த ஓவிய வேலைப்பாட்டுப் பொற்கலத்தில் அரசர்க்குரிய அறுசுவையுண்டியைப் படைத்தாற் போலும். குறள் வெண்பாவால் ஆனதினாலும், வீடுபேற்று வழியைக் கூறி மறைத் தன்மை பெற்றதினாலும், திருக்குறள் என அடையடுத்த ஆகு பெயர் பெற்றது.

இருவகை மொழிநடையுட் சிறந்தது செய்யுள். இருவகைச் செய்யுளுட் சிறந்ததுபா, நால்வகைப் பாவுட் சிறந்தது வெண்பா.

"காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம்
பேசும் உலாவிற் பெதும்பை புலி - ஆசு
வலவர்க்கு வண்ணம் புவியாமற் றெல்லாப்
புலவர்க்கும் வெண்பாப் புலி."

( தனிப்பாடல் )

ஐவகை வெண்பாவுட் குறுகியது குறள் வெண்பா. பயனில் சொல் பகர்வானைப் பதடியென்னும் திருவள்ளுவர், சொற்சுருக்கம் பற்றிக் குறள் வெண்பாவையே தம் நூற்குத் கொண்டார்.

திருவள்ளுவரின் பாச்சிறப்பை,

"பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புனதம்
ஆவிற் கருமுனியா யானைக் கமரரும்பல்
தேவிற் றிருமால் எனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுர்வெண்பா."

என்னும் திருவள்ளுவ மாலைப் பாவும்; நூற்சிறப்பை,

 "நிழவருமை வெய்யிலிலே நின்றறிமி னீசன்
கழலருமை வெவ்வினையிற் காண்மின் - பழகுதமிழ்ச்
சொல்லருமை நாலிரண்டிற் சோமன் கொடையருமை
புல்லரிடத் தேயறிமின் போய்."

(ஒளவையார் தனிப்பாடல்)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:06:53(இந்திய நேரம்)