தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai-திருக்குறட்கு வட சொல் தேவையின்மை

4. திருக்குறட்கு வடசொல் தேவையின்மை 
 

இது பொழுதுள்ள இலக்கிய நூல்களுள் முதலதான திருக்குறளிலும் ஒரு சில வடசொற்களிருப்பதால், வரலாற்றாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் இல்லாத சில புலவரும் துறவியரும், திருவள்ளுவரும் தம் நூற்கு வடசொற்றுணை வேண்டினரெனக் கருதுகின்றனர். தமிழ் குமரி நாட்டில் தோன்றிய உலகமுதற்றாயுயர் தனிச் செம்மொழியென்றும், திரவிடத்திற்குத் தாயும்  ஆரியத்திற்கு மூலமுமாகுமென்றும், சமற்கிருதத்தில் ஐந்திலிருபகுதி தமிழென்றும், குமரி நாட்டு உலகவழக்குச் சொற்களுடன் முதலிரு கழகச் செய்யுள் வழக்குச் சொற்களும் அடியோடு அழியுண்டனவென்றும், இந்நொடித்த நிலையிலும் பிறமொழித்துணையின்றித் தமிழ் தனித்து வழங்கவும் தழைத்தோங்கவுங் கூடுமென்றும், இது ஏனைமொழி கட்கியலாதென்றும், தமிழிற் கலந்துள்ள வடசொற்களெல்லாம் அதைக் கெடுத்தற்கென்றே ஆரியராற் புகுத்தப்பட்டனவேயன்றி, தமிழறிஞர் அவற்றின் தேவையுணர்ந்து விரும்பிக் கடன் கொண்டவையல்ல வென்றும், அவர் அறிந்திலர். அக்காலத்தில் மொழியாராய்ச்சியின்மையாலும் வடசொற்கள் தமிழில் அருகியே வழங்கியமையாலும், அவற்றைத் திருவள்ளுவர் கண்டு விலக்க முடியாமற் போயிற்று. எதுபோலவெனின், ஆயிரக்கணக்கானவர் உண்ணும் ஒரு திருமண விருந்தில் ஒரு சில அயலார் அமர்ந்திருப்பினும், பரிமாறிகள் அவரைக் கண்டு விலக்க முடியாதது போலவென்க.

திருக்குறட்கு வடசொல் தேவையின்மையை, அஃதின்றியும் கீழ்க்கண்டவாறு பொருள் கெடாது குறளமைதல் நோக்கித் தெளிக.

அந்தம்

543. வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
  ஒருதலை யொல்லைக் கெடும்.

'வெருவருவ', 'ஒருதலையா' என்றும் அமையலாம்.

593. ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்கும்
  உறுதியாய்க் கைத்துடை யார்.

உறுதலைக் கைத்து என்றும் அமையலாம்.

அமரர்

121. அடக்க முவணுல குய்க்கு மடங்காமை 
 யாரிரு ளுய்த்து விடும்.

உவணுலகு தேவருலகம். உவணுலகம் என்றும் அமையலாம்.
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:10:08(இந்திய நேரம்)