Primary tabs
யது. இப்புறத்திணையேழும் அவ்வகத்திணையேழற்கும் முறையே புறனாயவை.
புறப்பொருள் எழனுள் வெட்சியாவது ஆதந்தோம்பலும் அந்நிரை மீட்டலும், வஞ்சியாவது பகைமேற் சேறல். உழிஞையாவது அரணை முற்றலும் காத்தலும். தும்பையாவது வந்த வேந்தனை இருந்த வேந்தன் எதிர்சென்று பொருதல். வாகையாவது பொருது வெற்றி பெறுதல். (இது அரசவாகை. ஏனையோருடைய இயல்பை மிகுதிப் படுத்தலும் வாகை எனப்பெறும்.) காஞ்சியாவது நிலையாத உலகியற்கையைப் பொருந்திய நெறியினையுடையது. பாடாணாவது பாடுதற்குரிய ஆண்மகனது பெருமை பொருந்திய ஒழுக்கத்தைப் பாடுகின்ற அம்முறையினையுடையது இவை யெல்லாம் அரசனுக்கும் குடிகளுக்கும் உரிய அறமும் பொருளும் உணர்த்துவனவாம்.
அறம்பொரு ளின்பங்களின் நிலையின்மையை உரைத்தற்குரிய காஞ்சி எல்லாத்திணைக்கும் ஒத்த மரபினது. எதிர்த்த வேந்தர்க்கும் எதிர்சென்று தாக்கும் வேந்தர்க்கும் அறம்பொரு ளின்பங்களின் நிலையாமையைக் கூறி, இறப்பினுக் கஞ்சாது நின்று வீடுபேறு நிமித்தமாகச் செய்யக்கடவ கடமைகளை அறம் பிறழாமல் செய்யுமாறு வற்புறுத்துவதே இத்திணையின் குறிப்பு. "தலைவரும் பொருளைத் தக்காங் குணர்த்தி, நிலைஇ யாமை நெறிபட வுரைத்தன்று."
முதுமொழிக்காஞ்சி யென்பது காஞ்சித்திணையின் துறைகளில் ஒன்று : முதுமொழிகளால் காஞ்சியை விளக்குவது என்பதாம். "ஏதமில் அறமுதல் இயல்பிவை யென்னும், மூதுரை பொருந்திய முதுமொழிக்காஞ்சி" என்பது இலக்கணவிளக்கம். இதனைத் திவாகரர் "கழிந்தோர் ஏனை ஒழிந்தோர்க்குக் காட்டிய, முறைமை யாகும் முதுமொழிக்காஞ்சி" என்றார்.
இத்துறைப் பெயரே பெயரான் இந்நூல் பத்ததிகாரமும் ஒவ்வோரதிகாரத்தில் பப்பத்து முதுமொழியுமாக அமைக்கப் பெற்றது. ஒவ்வொரு முதுமொழியும் ஒவ்வொரு குறட்டாழிசை. இந்நூல் அற முதலிய பாகுபாட்டை முறையாகக் கடைப்பிடித்திலது. வகுத்துக்