தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalavazhi Narpathu


நூலுள் சோழனைக் குறித்து, புனல் நாடன், நீர் நாடன், காவிரி நாடன், காவிரி நீர் நாடன், செம்பியன், என்று இவ்வாறு பொதுப் படையாகச் சுட்டியுள்ளாரேயன்றி, அவனது பெயர் குறிக்கப்படவில்லை. செங்கண் மால் (4, 5, 11), செங்கண்சின மால் (15, 21, 29,30, 40 ) என்பன சோழன் செங்கணான் பெயரைச் சுட்டியனஆகா. பூவைநிலை வகையால் சோழனைச் 'சேய்' (13, 18, 34)என்று சுட்டியுள்ளது போல, இங்கும் திருமாலாகக் குறித்துள்ளார் என்றே கொள்ள வேண்டும். இங்ஙனமே சேரன் பெயரும் குறிக்கப் பெறவில்லை. பொதுவகையாக வேந்தர் என்னும் சொல்லையும், பகைவரைக் குறிக்கும் தெவ்வர், கூடார், செற்றார், நண்ணார், மேவார், ஒன்னார், அடங்கார் என்னும் சொற்களையுமே தந்துள்ளார். ஒரே ஒரு பாடலில் 'வஞ்சிக்கோ' (39)என்பது உள்ளது. 'கொங்கரை அட்டகளத்து' (14) என்பதனால் கொங்கர் சேரனுக்குத் துணையாக வந்து போரிட்டனர் என்பது பெறப்படும். சோழன் சேரனைச் சிறை செய்தான் என்ற இறுதிக் குறிப்பிற்கு மாறாக, 'வஞ்சிக்கோ அட்டகளத்து' (39) என்று சேரனைக் கொன்றதாகவே பாடலில் உள்ளது. 'வஞ்சிக்கோவைக் கொன்ற களத்து ' என்ற பழைய உரையும் கவனிக்கத் தக்கது. அடுதல் என்பதற்கு வருத்துதல், அழித்தல், கொல்லுதல் முதலிய பல பொருள்கள் உள்ளமையினால், அட்ட என்பதற்கு வருத்திய என்று இறுதிக் குறிப்பிற்கு ஏற்பவும் பொருள் கொள்ளுதல் சாலும். போர் என்ற இடத்தைக் குறித்து நூலுள் ஒருகுறிப்பும் இல்லை. 'காவிரி நாடன் கழுமலம் கொண்டநாள்' (36) என்று வருதலின், இந்தப் போரில் சோழன் கழுமலம் என்ற ஊரைத் தனக்கு உரித்தாக்கிக் கொண்டான் என்பது போதரும்.

பொய்கையார் களவழி நாற்பதுபாடிச் சேரனைச் சிறையிலிருந்து விடுவித்தார் என்றே கலிங்கத்துப் பரணி, மூவருலா, தமிழ் விடு தூது முதலிய பின்னூல்கள் அறிவிக்கின்றன.

களவழிக் கவிதை பொய்கை உரைசெய்ய உதியன்
கால்வழித் தளையை வெட்டி அரசிட்ட அவனும்

என்பது கலிங்கத்துப் பரணி (182).

மேதக்க பொய்கை கவி கொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திவனும் (விக்கிரம.14)

அணங்கு, படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு
கொடுத்துக் களவழிப் பாக் கொண்டோன் (குலோத்.19-20)

நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் கால் தளையை விட்டகோன் (இராச. 18)

என வருவன மூவருலாப் பகுதிகள். தமிழ் விடு தூது,

சேரமான் தன்னடிக்கு அண்டு தளை விடுத்தாய்; ஏழ் தளை உன்
பொன்னடிக்கு உண்டு என்பது என்ன புத்தியோ!

என்று சிலேடை நயம்படக் கூறுகிறது.

செய்கை அரிய களவழிப் பா முன்செய்த
பொய்கை ஒருவனால் போம் தரமோ-சைய
மலைச் சிறை தீர் வாட்கண்டன் வெள்ளணி நாள் வாழ்த்திக்
கொலைச் சிறை தீர் வேந்துக்குழாம்?

என வரும் ஒரு பழம்பாடலை நச்சினார்க்கினியர் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:39:12(இந்திய நேரம்)