Primary tabs
இங்ஙனம் பிறநூல்களும், தனிப்பாடலும், நூல் இறுதியிலுள்ள குறிப்பை ஒத்து அமைதலின், பொய்கையார் களவழி நாற்பது பாடிச் சேரமானைச் சிறையிலிருந்து விடுவித்தார் என்ற செய்தி உண்மையொடு பட்டதாகலாம்.
இச் செய்திக்கு மாறுபட்டதொரு குறிப்பு, 'குழவி இறப்பினும் ஊன்-தடி பிறப்பினும்'எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாட்டின் (74) பழையகுறிப்பில் காணப்படுகிறது. அது,
'சேரமான் கணைக்காலிரும் பொறைசோழன் செங்கணானோடு
திருப்போர்ப்
புறத்துப் பொருது, பற்றுக்கோட்பட்டு,
குடவாயிற்கோட்டத்துச் சிறையில்
கிடந்து, "தண்ணீர் தா" என்று, பெறாது,
பெயர்த்துப்பெற்றுக் கைக்
கொண்டிருந்து, உண்ணான் சொல்லித் துஞ்சிய
பாட்டு'-என்பது.
இக் குறிப்பில் பொய்கையாரைப் பற்றிய செய்தியும், சிறைவீடு கொண்ட குறிப்பும் இல்லை. களவழிக் குறிப்பிற்கு மாறாக, சேரமான் கணைக்காலிரும்பொறை சிறைக் கோட்டத்தில் கிடந்து மானத்தால் இறந்து பட்டதாகக் காணப்படுகிறது. களவழிக் குறிப்புடன் இது மாறுபட்டது அன்று என்று காட்ட முற்பட்டோரில் சிலர், 'துஞ்சிய' என்பதற்கு வேறு வகையாகப் பொருள் கூறலாயினர். டாக்டர் உ.வே.சாமிநாதையர் 74-ஆம் புறப்பாட்டின் அடிக்குறிப்பில்,'துஞ்சிய என்பதற்கு மூர்ச்சித்த என்று பொருள் கொள்ளவேண்டும் போலும்!' என்று குறித்துள்ளார். மேலும், தமது 'சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்' என்ற நூலில்(பக். 94), 'துஞ்சிய என்ற சொல் இறந்த என்ற பொருளையே மிகுதியும் தருவதாயினும், இங்கு மூர்ச்சித்த என்றுபொருள் கொள்ள வேண்டும்' என உறுதியாக எழுதியுள்ளார். இ.வை. அனந்தராமையர், 'துஞ்சிய என்பதற்கு உறங்கிய என்று பொருள் கொள்ளலாம்' என்பர். துஞ்சிய என்பது இறந்த என்னும் பொருளிலேயே மிகுதியாக வருதலின், இங்கும் இறந்த என்று பொருள் கோடலே நேரிதாம்.
புறநானூற்றுக் குறிப்பிலும் களவழி நாற்பதின் குறிப்பிலும் சேர சோழர்களது பெயரில் ஒற்றுமை இருப்பினும், முக்கியமான முடிவு நிகழ்ச்சி வேறுபட்டுள்ளது. புறநானூற்றில் இந்தப் பாட்டின் குறிப்பில் தவிர, வேறு இடங்களிலோ அல்லது சங்க நூல்கள் பிறவற்றிலோ சோழன் செங்கணானைப் பற்றியும் கணைக்காலிரும் பொறையைப் பற்றியும் ஒரு குறிப்பும் காணப் பெறாமையும் சிந்தித்தற் குரியது. புறநானூற்றில் இரண்டு பாடல்களைப் பாடிய (48, 49) பொய்கையார் என்பவர் சேரமான் கோக்கோதை மார்பனைப் பாடியுள்ளாரேயன்றி, கணைக்காலிரும் பொறையைப் பாடவில்லை. எனவே, புறநானூற்றில் காணும் செங்கணான், சேரமான் கணைக்காலிரும்பொறை, பொய்கையார் ஆகியோருக்கும், களவழி நாற்பதில் குறிக்கப் பெறுபவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக எண்ணக்கூடவில்லை. இவர்கள் ஒரே பெயரைக் கொண்டு வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்று கொள்ளுதலே இரு நூல் குறிப்புகளுக்கும் ஒத்ததாதல்கூடும்.
தமிழ் நாவலர் சரிதையில், 'சேரன் கணைக்காலிரும்பொறை செங்கணானால் குணவாயிற்கோட்டத்துத் தளைப்பட்டபோது பொய்கைக்கு எழுதிவிடுத்த பாட்டு' என்று குறிப்பிட்டு 'குழவி இறப்பினும்' என மேற்குறித்த புறப்பாடலைக் (74) கொடுத்து, அதன்பின்னர், 'இது கேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டு அரசளித்தான்' என்று அந் நூலைத் தொகுத்தவர் எழுதியுள்ளார். இதனால், இந் நூலாசிரியர் புறநானூற்றுக் குறிப்பையும், களவழி நாற்பதின் குறிப்பையும் ஒன்றாக இணைக்க முயன்றுள்ளார் என்பதும் புலனாம்.