தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kaar Narpathu

‘மெய்ந்நிலைய' ‘கைந்நிலையோடாம்' ‘நன்னிலையவாம்' என்றிவ்வாறெல்லாம் பாடவேற்றுமையும் காட்டுவர்.

இனி, கார் நாற்பது என்னும் இந்நூலை யியற்றினார் மதுரைக் கண்ணங்கூத்தனார் எனப்படும் நல்லிசைப் புலவராவர். கூத்தனார் என்னும் பெயருடைய இவர் கண்ணன் என்பார்க்கு மகனாராதலிற் கண்ணங்கூத்தனார் என்றும் மதுரையிற் பிறந்தமையாலோ இருந்தமையாலோ மதுரைக் கண்ணங் கூத்தனார் என்றும் வழங்கப்பட்டனரெனக் கொள்ளல்வேண்டும். கண்ணனுக்கு மகனாராகிய கூத்தனார் கண்ணங்கூத்தனார் என வழங்கப்படுதற்கு விதி, 

‘அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியும்
நிற்றலு முரித்தே யம்மென் சாரியை
மக்கண் முறைதொகூஉ மருங்கி னான'

என்னும் தொல்காப்பியச் சூத்திரமாகும். இவ்வாசிரியர் கடைச்சங்கப் புலவரென்பது ஒருதலையாயின் இவரது காலம் கி. பி. 200 -க்கு முற்பட்டதெனக் கருதலாகும் . இவர் இன்ன பிறப்பினர் எனத் துணிதற்கு இடனின்று. இவரது சமயம் சமணமோம பௌத்தமோ அன்றென்பது தெளிவு. இவர் இந்நூலன்றி வேறு செய்யுளொன்று இயற்றியதாகத் தெரியவில்லை.

இந்நூற் செய்யுட்களெல்லாம் அகம் புறம் என்னும் பொருள் பாகுபாட்டினுள் இன்பங்கண்ணிய அகத்தின் பகுதியாகிய முல்லைத் திணையின் பாற்பட்டனவாகும். முல்லையாவது ஒரு தலைமகன் தனக்குரிய யாதானும் ஒரு நிமித்தத்தாற் பிரிந்து சென்றவழி, அவன் வருந்துணையும் தலைமகள் அவன் கூறிய சொற்பிழையாது கற்பால் ஆற்றியிருத்தலாம். வேந்தற்குத் துணையாகப் போர் புரியச் செல்லுதலுற்ற தலைமகன் ‘கார் காலத்து மீண்டு வருவேன்' எனக் காலங்குறித்துப் பிரிந்தானாக, அதுகாறும் அரிதின் ஆற்றியிருந்த தலையன்பினளாய தலைவிக்கு அப் பருவம் வந்தும் அவன் வரத் தாழ்த்திடின் ஆற்றாமை விஞ்சுதல் இயற்கை. அங்ஙனம் விஞ்சுதலுற்ற ஆற்றாமையும் ஆற்றுதலும் ஒன்றினொன்றிகலி நிற்கும் அந்நிலையை தலைமகளது அன்பின் பெருமையும் கற்பின் அருமையும் நனிவிளங்குதற் குரியதொன்றாகலின், அதுவே பொருளாக இந்நூல் இயற்றப்பட்ட தென்க. இதிலுள்ள செய்யுட்களெல்லாம் தலைவி, தோழி, தலைவன் என்போரின் கூற்றுக்களாகவுள்ளன. ஒவ்வொரு செய்யுளிலும் கார் வந்தமை கூறப்படுதலின் இந்நூல் "கார் நாற்பது" எனப்பட்டது. இதில் முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளும் முதற்பொருளும் அன்றிக் கருப்பொருளிற் பல கூறப்பட்டுள்ளன. இதிலுள்ள உவமைகளெல்லாம் கற்போர்க்கு இன்பம் பயக்குந்தகையன.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:41:31(இந்திய நேரம்)