Primary tabs
முன்றுறை அரையனார் என்ற பெயர்இயற்பெயர் என்று எண்ணுதற்கு இடமில்லை. முன்றுறை என்னும் இடத்தில் அரசு புரிந்த அரசர் என்பதே இதன் பொருளாகும்.'முன்றுறை மன்னவன்' என்பது தற்சிறப்புப் பாயிரத்துள் காண்கிறது. ஒருகால், முன்றுறையில் வாழ்ந்த 'அரையர்'என்னும் சிறப்புப் பெயர் பெற்ற ஒரு தலைவராக இவர்இருத்தலும் கூடும். அன்றியும், அரையர் என்பது சேனாவரையர் என்னும் தொல்காப்பிய உரையாசிரியர் பெயரிலும் காணப்பெறுதல் இங்குச் சிந்திக்கத் தக்கது.மேலும், 'அரையர்' என்பது ஒரு மரபுப் பெயராகவோகுடிப் பெயராகவோ இருத்தலும் கூடும். அரையர் குடியில்புலமையில் சிறந்து விளங்கிய இவரது இயற்பெயரைவிடுத்து, அக்குடிப்பெயரால் வழங்கிவந்தனரோ என்று ஐயுறவு கொள்ளவும் இடமுண்டு. 'முன்றுறை, எங்குள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. தமிழகத்தில் கொற்கைமுன்றுறை, காவிரி முன்றுறை திருமருத முன்றுறை, கழார்முன்றுறை என்னும் இடங்கள் இருந்தனவாகப் பண்டைஇலக்கியம் வாயிலாக அறிகிறோம். இவற்றைப்போலவே பழமொழி ஆசிரியர் வாழ்ந்த ஊரும் நீர்த்துறைச்சிறப்பு வாய்ந்த ஓர் இடமாக இருத்தல் கூடும்.அடைமொழி இன்றி 'முன்றுறை' என இவ்வூர் வழங்கப்பெறுதலினால் இது அக் காலத்தில் மிக்க பெருஞ் சிறப்புடன் விளங்கியிருத்தல் வேண்டும். இவர் சமண சமயத்தினர் என்பது தற் சிறப்புப் பாயிரத்தால் விளங்கும்.
இந்நூல், முக்கியமாக நாலடியாரிலும், திருக்குறள் முதலிய கீழ்க்கணக்கு நூல்களிலும் வந்துள்ளபல கருத்துகளைச் சிற்சில இடங்களில் அடியொற்றிச்செல்லுகிறது. தூங்கு எயில் எறிந்த சோழன், கரிகாலன், பாரி, பேகன், முதலியோரைப் பற்றிய முற்கால நிகழ்ச்சிகளை எடுத்தாளுதலோடு, பொற்கைப்பாண்டியன், மனுநீதிச்சோழன் முதலியோரைப் பற்றிய பிற்கால வரலாறுகளையும் பழமொழி ஆசிரியர் தம் நூலுள் சுட்டியுள்ளார். இவர்தமது பாடல் ஒன்றில் (143) குறித்துள்ள 'பிரம்பூரி'என்னும் நெல்வகை அப்பர் பாடலிலும் (4, 20, 7) காணப்பெறுகிறது. மரிசாதி (118), மன்றிவிடல் (286) என்று சாஸனங்களில் வழங்கும் சொற்கள் பழமொழிப் பாடல்களில் பயின்றுள்ளன. இவற்றால் பழமொழி நானூறு நாலடி நானூற்றிற்குப்பின்னர்த் தோன்றியது என்று கருதலாம்.
பழமொழி நானூற்றுப் பாடல்கள் பலவற்றில் காணும் ஒரு பொது இயல்பு கவனிக்கத் தக்கது. பழமொழி பாடலின் இறுதியில் வருகின்றது. முன் இரண்டு அடிகளில் அதற்கு உரிய விளக்கத்தைக் காணலாம். மூன்றாம் அடியில் பெரும்பாலும் ஆடூஉ முன்னிலை, மகடூஉ முன்னிலைத்தொடர்களுள் ஒன்று இடம் பெறுகிறது. ஆசிரியர் எடுத்துக்கூறும் முறையில் பழமொழியின் பொருளும், பாடலில்அவர் சுட்டும் அறநெறியும் நமக்கு நன்கு புலனாகின்றன.
விளித் தொடர்களில் ஆடூஉ முன்னிலைமிகுந்தும், மகடூஉ முன்னிலை மிகக் குறைந்தும் காணப்படுகின்றன.
ஆசிரியர், தாம் அவ்வப்போது ஆய்ந்து உணர்ந்த பொருள்களைப் பழமொழியோடு பொருத்திப்பாடி வந்திருக்க வேண்டும். இதனாலேதான், இந்நூற்பாடல்கள் எல்லாம் தனித்தனியே பொருள் முடிந்து நிற்கும் முத்தகச்செய்யுட்களாய் அமைந்து, தனித்தனிக் கருத்தை வெளியிடுகின்றன அன்றி, ஒன்றற்கு ஒன்று பொருள் தொடர்பு உடையதாக அமையவில்லை போலும்! பழமொழியின் பழைய உரையாசிரியரும்,'இருகயல் உண்கண்' எனத் தொடங்கும் பாடலின் உரையில்(338) 'இந்த நானூறும் முத்தகச் செய்யுள் ஆதலால், தனியேநின்று ஒரு பொருள் பயந்து முற்றுப்பெற்றன என அறிக'என்று எழுதிய குறிப்பும் மேற்குறித்த கருத்தை அரண்செய்வதாகும்.