தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pazamozhi Naanooru


நூலின் முதற்பாடல் பழமொழி ஏடுகளில் காணப்பெறவில்லை. ஆயினும், அதற்கு உரிய பழையஉரைப்பகுதி காணப்பெறுகின்றது. ச. ஆறுமுக நயினார்வெளியிட்ட மூலப் பதிப்பில், முதற்பாடலுக்குப் பழைய உரையே அச்சிடப் பெற்றிருக்கிறது. இவ் உரைக்குரியமூலச் செய்யுளை நன்னூலின் பழைய உரைகாரராகிய மயிலைநாதர் கொண்டுகூட்டுப் பொருள்கோளுக்கு மேற்கோள் காட்டியிருப்பது தெரிந்து, டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள், செந்தமிழ்ப் பத்திரிகை வாயிலாக வெளியிட்டனர்.அதன் பின்னரே, பழமொழியின் முதற்பாடல் பழமொழி அச்சு நூல்களில் இடம் பெறலாயிற்று.

மேற்குறித்த ச. ஆறுமுக நயினார் தாம் பழமொழி நூலைப் பிரதிகளில் உள்ளபடி அச்சுஇயற்றியவர் (1904). முதல் இருநூறு பாடல்களைப் பழையஉரையுடனும், தமது விளக்கக் குறிப்புகளுடனும் வெளியிட்டதிரு. நாராயண ஐயங்காரும் (1918, 1922) பிரதிகளில் காணும் வரிசை முறையையே பின்பற்றியிருக்கிறார். பழமொழிப் பாடல்களின் வரிசை முறையை மாற்றி முதல்முதல் அச்சு இயற்றியவர் சோடசாவதானம் சுப்பராயச்செட்டியார் (1874). இவர் நாலடியாரைப் போலப் பத்துப்பாடல்கள் கொண்ட 39 அதிகாரமாகக் கொண்டு, அதற்குத்தக்கபடி பாடல்களின் வரிசை முறையை மாற்றி அமைத்து, பால், இயல் பாகுபாடுகளும் செய்திருக்கிறார். பத்துவெண்பாக்கள் இவர் பதிப்பில் விடுபட்டுப்போயின.

பழைய உரையுடன் பழமொழி நூலை வெளியிட்டதுதி. செல்வக்கேசவராய முதலியாரும் (1916) வேறொருவகையாக இந்நூலைப் பாகுபாடு செய்து, சுப்பராயச் செட்டியாரைப் போன்றே பாடல்களின் வரிசை முறையையும் மாற்றிஅமைத்துள்ளார். நூலை ஐந்து பெரும்பிரிவுகளாகவும், 35சிறு பிரிவுகளாகவும் இவர் கொண்டுள்ளார். இச் சிறுபிரிவுகள் ஒரு வரையறை இன்றி, 4 பாடல்கள் முதல் 21பாடல்கள் வரையில் வெவ்வேறு அளவில் பாடல்களைப்பெற்றுள்ளன. முதலியார் அவர்கள் தமது பதிப்புரையில்,'ஓர் இனமான பொருள்களை ஒருவழி வைத்து வகைப்படுத்தாவிட்டால், இந்நூலைப் படிப்பது மாணாக்கர்க்கு இனிதுறாது என்றுகடவுள் வாழ்த்து நீங்கலாக முந்நூற்றுத் தொண்ணூற்றொன்பது செய்யுள்களையும் ஐந்து பெரும்பிரிவுகளாகவும், அவைகளில் ஒவ்வொன்றையும் ஏற்ற பெற்றி சிறியஉட்பிரிவுகளாகவும், பிரித்து வைத்தேன். இங்ஙனம் பிரிப்பதில் எல்லோரும் ஒருமனப்படார் என்பது உரைக்க வேண்டா' என்று குறித்துள்ளார். இவர்கடவுள் வணக்கமாகக் குறிப்பிடும் செய்யுள் நூலின் முதற்செய்யுளாகப் பிரதிகளில் தெரிய வருகிறதேயன்றி, கடவுள் வணக்கம் என்று சுவடிகளில் குறிக்கப்பெறவில்லை.

நூலகத்துப் பயின்று வரும் பழமொழிகளில்பல, எதுகை மோனைகளுக்கு ஏற்ப மாறுதல்கள் பெற்றிருக்கின்றன. சிற்சில பழமொழிகளின் வடிவம் விளங்கவில்லை. இரண்டொரு பாடல்கள் பழமொழியைப் பெற்றுள்ளனவோ என்று ஐயுறும்படியாகவும் உள்ளன.

'புறத்திரட்டு' என்னும் தொகைநூலைத் திரட்டியவர், இந்நூலின் பொருட்சிறப்புக்கருதி, 319 பாடல்களைத் தம் நூலுள் தாம் வகுத்துக் கொண்டபொருளுக்கு இயைய அங்கங்கே கோத்திருக்கின்றார். இவர் காட்டிய செய்யுட்களில் மூன்று (புறத். 146, 1107,1139) பழமொழி நூற் பிரதிகளில் காணப்பெறவில்லை. இவற்றுள் ஒன்றின் அமைப்பு (146) சிறுபஞ்ச மூலச் செய்யுட்களை ஒத்துள்ளமையால், இது சிறுபஞ்ச மூலச் செய்யுளாகஇருத்தல் கூடும் என்று புறத்திரட்டு நூலின் பதிப்பாசிரியர் குறிப்பு எழுதியுள்ளார். இந்த மூன்று பாடல்களையும்,'மிகைப் பாடல்கள்' என்னும் தலைப்பின் கீழ் நூல்இறுதியில் சேர்த்துள்ளோம்; அடுத்து, தற்சிறப்புப்பாயிரமாக உள்ள ஒரு செய்யுளையும் அமைத்துள்ளோம்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:49:54(இந்திய நேரம்)