Primary tabs
இச்செய்தியை மாதவி அறிகின்றாள்; உடனே தன் பொருள்களையெல்லாம் போதியின்கீழ் மாதவர் முன் புண்ணியதானம் புரிந்து துறவுக் கோலங்கொள்கின்றாள்; அறவண வடிகள்பால் அறவுரைகேட்டுப் புத்த தருமத்தை மேற்கொண்டு ஒழுகிவருவாளாயினாள்.
பின்னர் மணிமேகலைக்கும் அச்செய்தி எட்டுகின்றது. அப்போது அங்கே இந்திரவிழா நடைபெறுகின்றது. அதுகாலை மணிகேலை பூமாலை தொடுத்துக்கொண்டிருக்கின்றாள். தந்தை இறந்த செய்தியறிந்ததும் கண்ணீர் கலங்கத் துன்புறுகின்றாள். கண்ணினீர் பூவின் மேல் விழுந்தது; அதனால் அதன் தூய்மை கெட்டுவிடுகின்றது. அப்பால் மலர்கொய்வதற்கு மலர்வனஞ் செல்கின்றாள். மணிமேகலையின் பால் காதல் கொண்டுள்ள அவ்வூர் வேந்தன் மகன் உதயகுமரன் என்பவன், இவளைத் தொடர்கின்றான். மணிமேகலையோடு உடன் சென்றிருந்த சுதமதி என்னும் அவள் தோழி அவளை அவன் வரக்கண்டதும் ஆங்குள்ள பளிக்கறையொன்றில் அடைத்துத் தாழிட்டுவிடுகின்றாள். அப்பால் உதயகுமரன் அவளைப் பெற விழைந்து அப்பளிக்கறைக்குச் செல்ல வழிகாணாது தியங்கி நின்று 'பின்னால் சித்திராபதியால் அவளை அடையக்கூடு'மென எண்ணிச் சென்றுவிடுகின்றான். அப்போது இந்திரவிழாவைக் காண்பதற்கு வந்த மணிமேகலாதெய்வம் அவர்கட்கு அறிமுகமான ஓர் மங்கை வேடம்பூண்டு அப் பொழிலையெய்திப் பளிக்கறையிலுள்ள புத்ததேவனின் பாதபீடிகையைப் பலவாறு வாழ்த்தியது. அதுகாலைப் பகற்பொழுது கழிகின்றது ; அந்திமாலை வந்துறுகின்றது.
உடனே வானத்தின்கண் திங்கண்மண்டிலந்தோன்றி வெள்ளி வெண்குடத்திலிருந்து பால்சொரிவதுபோலத் தன் தண்ணிலவைச் சொரிகின்றது. அப்போது மணிமேகலாதெய்வம் மீட்டும் புத்ததேவனது பாதபீடிகையை வணங்கிநின்றது. அப்போது சுதமதியைப் பார்த்து' 'நீ யார், இங்கே நிற்பதற்குக் காரணம் என்ன? உங்கட்குற்ற துன்பம் யாது?' என்று கேட்டது. அவள் உதயகுமரன் வந்துகூறிச் சென்ற வரலாற்றைக் கூறினாள். அதுகேட்ட மணிமேகலாதெய்வம் "உதயகுமரனுக்கு மணிமேகலைபால் உள்ள விருப்பம் சிறிதும் தணிந்திலது. இஃது அறவோர் வனமென்று கருதிவிட்டு நீங்கினானாயினும், இதனைக் கடந்து நீயிர் சென்றால், புறத்துள்ள தெருவின்கண் வந்து உட்படுத்துவான். ஆகவே இவ்வனத்தைச் சூழ்ந்த மதிலின் மேல்திசை இடத்ததாகிய சிறிய வாயில்வழியாகச் சென்று மாதவர் உறையும் சக்கர வாளக்கோட்டத்தை எய்தின் யாதொரு துன்பமும் அணுகாது; அங்கே செல்லுமின்," என்று கூறியது. அப்போது சுதமதி அதற்குச் சக்கர வாளக்கோட்டம் என்னும் பெயர் கூறுதற்குக் காரணங்கேட்ப, மணி மேகலாதெய்வம் அதன் வரலாற்றைக் கூறச் சுதமதி தூங்குதலுற்றாள். அதுகாலை மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தழுவியெடுத்து, வான்வழியே முப்பதுயோசனை தொலைவு தெற்கே சென்று கடல் சூழ்ந்த மணிபல்லவம் என்னும்தீவில் அவளைவைத்துவிட்டுச்சென்றது.
'கங்குல் கழியில் என் கையகத்தா,' ளென ஏங்கித் துயிலாமல் இருந்த உதயகுமரன் கனவில் மணிமேகலாதெய்வம் தோன்றி, 'மன்னவன் மகனே! நீ தவத்திறம் பூண்டாள்தன்மேல் வைத்த அவத்திறம் ஒழிக,' என அறிவுரை கூறிவிட்டு உவவனஞ்சென்று ஆங்கே தூங்குகின்ற சுதமதியைத் துயில்நீக்கி 'யான் மணிமேகலாதெய்வம்; இங்கே இந்திரவிழாக் காண்டற்குப் போந்தேன்; நீ அஞ்சாதே; மணிமேகலைக்குப்