Primary tabs
புத்தன் அறநெறியிற் செல்லுதற்குரிய நற்காலம் வந்துற்றது ; அவளை நான் எடுத்துச்சென்று மணிபல்லவத் தீவின்கண் வைத்துள்ளேன் ; இற்றைக்கு ஏழாம்நாள் இவண் வந்துசேருவாள்; அவள் வரும் பொழுது பற்பல வியத்தகு செயல்கள் நிகழும்; மாதவிக்குச் சொல்க,' என்று கூறிச் சென்றது.
பின்பு சுதமதி எழுந்து மணிமேகலையின் பிரிவுக்கு வருந்தினாள். அவ்வனத்தின் மதில்வழியாகச் சக்கரவாளக்கோட்டத்தையடைந்து அங்குள்ள உலகவறவியின் ஒருபக்கத்தில் இருந்தாள்.
அப்பொழுது அங்குக் கந்தினை இடமாகக்கொண்டுறைகின்ற தெய்வப் பாவையானது, சுதமதி மயங்குமாறு அவளின் முற்பிறப்பின் வரலாற்றைக் கூறி அவளை அழைத்து 'மணிமேகலை தன் முற்பிறப்பின் வரலாற்றை அறிந்துகொண்டு இற்றைக்கு ஏழாம்நாள் இரவில் இந்நகர்க்கண் வந்துறுவாள் ; அவள் பிரிவுக்கு நீ அஞ்சாதே,' என்று சொல்லிற்று. அதுகேட்டு நெஞ்சம் திடுக்குற்ற சுதமதி, அன்று இரவு முழுதும் அவ்விடத்திலேயே இருந்து, ஞாயிறு தோன்றியவுடன் எழுந்து சென்று மாதவியை அடைந்து, முன்னாள் இரவில் நிக.ழ்ந்தவற்றை அவளிடம் கூறியவுடன் அவள் மாணிக்கத்தை இழந்த நாகப்பாம்பு போல் துன்பத்துடன் இருந்தாள். சுதமதி இன்னுயிர் இழந்த யாக்கை போலச் செயலற்றிருந்தாள்.
புகார்நகரில் சுதமதி செயலற்றிருப்ப, மணிபல்லவத்தில் கடலருகே மணலில் தூங்கிய மணிமேகலை துயிலுணர்ந்தெழுந்து தான் முன் காணப் பெறாத புதிய பொருள்களையே கண்டாளாதலின், அவைகளைப் பார்த்துத் திகைப்புற்றாள். அதுகாலைக் கதிரவன் தோன்றினான். தோன்றியவுடன், 'இவ்விடம் உவவனத்தில் நாம் கண்டறியாத ஒரு பகுதியாக இருத்தல் கூடுமோ? இது கனவோ ! நனவோ ! சுதமதி ! நீ யாங்கொளித்தாய் ! ஒரு மறுமொழி கூறு ; இருள் நீங்கிற்று ; மாதவி வருந்துவள் ; நான் தனியே இவண் இருக்க அஞ்சுகின்றேன் விரைந்து வருவாயாக,' என்று கூறிக்கொண்டு, நீர்த்துறைகளிலும் மணற்குன்றுகளிலும் சென்று அவளைத் தேடி ஒருவரையும் காணாதவளாய், அழுது கொண்டிருப்பவள் முன்னர், இந்திரனால் இடப்பட்டுக், கண்டு வணங்கினோர்க்குத் தம் பழம்பிறப்பை அறிவிப்பதாகிய புத்தபீடிகை தோன்றிற்று.
அதைக் கண்டவுடன் மணிமேகலை வியப்புற்றாள் ; தன்னையறியாது அவள் கைகள் தலைமேற் குவிந்தன. அதனை மும்முறை வலம் வந்து பணிந்து எழுந்தாள் ; அதன் காட்சியால் தன் பழம் பிறப்பின் நிகழ்ச்சிகளை உணர்ந்தாள். அப்போது மணிமேகலா தெய்வம் வானினின்றும், இறங்கியது. அது புத்தபீடிகையைப் புத்தராகவே மதித்து வாழ்த்தி வலம்வந்து வணங்கியது. வணங்கிய அத் தெய்வத்தை மணிமேகலை வணங்கி, 'உன் திருவருளால் என் பிறப்பை உணர்ந்தேன். என் கணவன் எங்கே உள்ளனன்,' என்று கேட்டாள். கேட்டலும் அத்தெய்வம், "இலக்குமி கேட்பாயாக ; நீ ஒருநாள் உன் கணவன் இராகுலனோடு ஒரு பொழிலில் ஊடியிருந்தாய்; அவன் அத்துனி நீங்குதற் பொருட்டு உன் அடியை வணங்கினான் ; அப்போது சாது சக்கரனென்னும் பௌத்தசாரண முனிவன், விசும்பினின்றும் கீழிறங்கி வந்தான் ; நீ அவனைக் கண்டு உடல் நடுங்கிப் பணிந்தாய்; அதுகண்ட இராகுலன், 'இங்கு வந்தவன் யார்?' என்று சினந்துரைக்க, அவன் வாயைப் பொத்தி 'நீ இவரைத் துதித்திடு,' என்று கூறி அவனோடு அம்முனிவன்