Primary tabs
அடிகளை வணங்கி அமுது செய்க,' என்று வேண்டி அமுது கொணர்ந்து உண்பித்தாய். அவன் உண்டருளிய அறம், நின் பிறப்பை ஒழிக்கும். அவ் இராகுலனே உதயகுமரன்; அதனால்தான் அவன் உன்னை விரும்பினான் ; உன் மனமும் அவனை மிக விரும்பியது ; அப் பற்றினை மாற்றி உன்னை நல்வழிப்படுத்த நினைந்து உன்னை இத் தீவிற்குக் கொணர்ந்து வைத்து இப் புத்தபீடிகையைக் காட்டினேன்; முற்பிறப்பில் உனக்குத் தவ்வையராக இருந்த தாரை, வீரை யென்னும் இருவரும் மாதவியும் சுதமதியுமாகப் பிறந்து நின்னுடன் ஒன்றுபட்டனர். நீ பழம் பிறப்பும், அறத்தின் இயல்பும் அறிந்து கொண்டனை. பிற சமயக் கணக்கர்களின் கொள்கைகளையும் இனிமேற் கேட்பாய்; கேட்குங்கால் நீ இளம் பெண் என்று கருதி அவர் தத்தம் சமயக் கொள்கைகளைக் கூறார்; ஆதலான், நீ அதுகாலை வேற்றுருக் கொள்ளுதல் வேண்டும்," என்று கூறி வேற்றுரு வெய்தும் மந்திரமொழியும் வானிற்செல்வதற்கு ஆக்கும் மந்திர மொழியும் அவளுக்கு உரைத்தது.
அப்பால், "நீ புத்தர் அருளிய அறநெறியை அடைதல் உறுதி ; பீடிகையை வணங்கி நின் நகர்க்கண் செல்லுக," என்று எழுந்து நின்று, மீட்டும் கீழிறங்கி வந்து, "மக்கள் யாக்கை உணவின் பிண்டம், இப்பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும்," என்று அதனை அவட்கு அருளிச் செய்து, வானில் எழுந்து சென்றது.
மணிமேகலா தெய்வம் சென்றபின், மணிமேகலை ஆங்குள்ள மணற்குன்று முதலியவற்றைப் பார்த்துக்கொண்டு மெல்ல உலாவி வந்தாள். அப்போது தீவதிலகை யென்பாள் தோன்றினாள் அவள் மணிமேகலையைப் பார்த்து 'இங்கே தனியே வந்த நீ யார்?' என்றாள். அதற்கு மணிமேகலை, தான் வந்த வரலாற்றைக் கூறிவிட்டு 'நீ யார்?' என்று தீவதிலகையை வினாவினாள்.
அவள் "இத்தீவிற்கு அயலிலுள்ள இரத்தின தீவத்தில் உயர்ந்து விளங்குகின்ற சமந்த மலையின் உச்சியிலுள்ள புத்ததேவன் திருவடிப் படிமைகளைத் தொழுதுகொண்டு முன்னொரு காலத்தில் இங்கு வந்தேன் ; வந்தது முதல், இந்திரன் ஏவலால், இப் பீடிகையைக் காத்துக் கொண்டிருக்கிறேன். என் பெயர் தீவதிலகை." என்று கூறி, புத்த தேவர் அருள்நெறியில் நடப்போரே இதனைக் காண்டற்கு உரியர். கண்டவர் தம் பழம் பிறப்பை உணர்வார்; நீ அவ்வாறானால், மிகப் பெரியை; இப் பீடிகைக்குமுன் 'கோமுகி' என்னும் பொய்கை யொன்று உளது. அதனுள்ளிருந்து 'அமுத சுரபி' என்னும் அட்சயபாத்திரம் ஒவ்வோர் ஆண்டும் வைகாசித் தூய நிறைமதி நாளில் தோன்றும்; இன்று அந்நாளே ; தோன்றும் காலமும் இதுவே ; இப்போழுது அது நின்கையில் வரும் போலும். அதில் இட்ட அமுதம் கொள்ளக் கொள்ளக் குறையாது வளர்ந்துகொண்டே இருக்கும் அதன் வரலாற்றை அறவண அடிகள்பால் நின்னூரிற் கேட்பாய்," என்று கூறினாள்.
மணிமேகலை அதை விரும்பி., பீடிகையைத் தொழுது, அவளுடன் சென்று கோமுகியை வலஞ் செய்து வந்து நின்றவுடன், அப்பாத்திரம் பொய்கையினுள்ளிருந்து, மணிமேகலையின் கையில் வந்தடைந்தது. உடனே அவள் மகிழ்ந்து, புத்ததேவரைப் பலவாறு வாழ்த்தித்தொழுதாள். அப்போது தீவதிலகை மணிமேகலைக்கு உயிர்களுக்கு உண்டாகும் பசிப் பிணியின் கொடுமையையும் அதை நீக்குவோர்க்கு உண்டாம் பெருமையையும் கூறி; 'இனி நீ உணவளித்து உயிர்களைப் பாதுகாக்கும்