Primary tabs
அறத்தைச் செய்வாய்' என்றாள். உடனே மணிமேகலை 'அவ்வாறே செய்வே,'னென்று கூறித் தீவதிலகையை வணங்கிப் புத்த பீடிகையைத் தொழுது வலங்கொண்டு பாத்திரத்தைக் கையிலேந்தி வானிலே எழுந்து சென்று, புகாரில் தன்னைக் காணாமல் வருந்திநிற்கும் சுதமதியையும், மாதவியையும் கண்டு, அவர்கள் வியப்படையுமாறு அவர்களின் முற்பிறப்பை அறிவித்து, "மக்கள் யாக்கையிற் பெறுதற்குரிய தவ வழியை இனி அறவண அடிகள்பாற் பெறக்கடவீர்; இஃது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் பாத்திரம் ஆகும்; இதனைத் தொழுமின்," என்று சொல்லி அதனை அன்புடன் தொழுத அவர்களோடு, அறவணவடிகளைக் காண்டற்குச் சென்றனள்.
சென்ற மணிமேகலை அறவணவடிகள் இருக்குமிடத்தை யடைந்தாள் ; அவர் திருவடியை மும்முறை வணங்கினாள் ; தான் உவவனஞ் சென்றது முதல் அட்சயபாத்திரம் பெற்றதுவரை யாவற்றையும் தெரிவித்தாள். அவர் கேட்டு மகிழ்ந்தனர் ; பின், முற்பிறப்பிலே துச்சயராசன் மனைவியராயிருந்த தாரையும் வீரையும் இறந்து முறையே மாதவியும், சுதமதியுமான வரலாற்றை அவர்கட்கு உரைத்துப் பின்னும் மணிமேகலையைப் பார்த்து, 'இவ்வுலகில் புத்ததேவன் அருளிய அறங்கள் குறைந்தன; மறங்கள் மிகுந்தன; சக்கரவாளத்திலுள்ள தேவர்களின் வேண்டுகோளினால், ஆயிரத்தறுநூற்றுப் பதினாறாம் ஆண்டில் துடித லோகத்திலுள்ள தேவன், இவ் வுலகிலே தோற்றஞ்செய்வான்; பின்பு யாவர்க்கும் அருளறத்தில் மனஞ்செல்லும்; புத்தர் தோன்றுங் காலத்தில், ஞாயிறு திங்கள் விண்மீன் முதலியனவும், உயிர்களும் இன்னின்னவாறு நலத்துடன் விளங்கும்,' என்று கூறிப் பின்னரும் 'இந் நகரில் உன்னால் சில நலங்கள் நிகழ்வனவாம், அவை நிகழ்ந்த பின்பல்லாமல், யான் கூறும் அறவுரை, நின் மனத்திற் பொருந்தாது. இவ் விருவரும் முற்பிறப்பிற் பாதபங்கய மலையை வணங்கினராதலின், பின்னர் உன்னோடு கூடிப் புத்தர் திருவடியை வணங்கி வினையினின்றும் விடுபட்டு வீட்டுநெறிச்செல்வர். ஆருயிர் மருந்தாகிய அமுதசுரபியை நீபெற்றனை; மக்கள், தேவர் என்பார்க்கு ஏற்ற தன்மையில் செய்யும் அறம், உயிர்களின் பசிப்பிணி தீர்த்தலொன்றே,' என்ற நல்ல அறவுரை கூறினார். மணிமேகலையும் உயிர்களின் பசித்துன்பம் நீங்கப் பாத்திரத்தை எடுத்தாள்.
அப்போது அறவண அடிகள், 'அமுதசுரபி யென்னும் அட்சய பாத்திரம் அருளிய ஆபுத்திரன் வரலாற்றைக் கேட்பாயாக,' வென்று கூறி அவன் வரலாற்றை விரித்துரைத்தார். பின்பு, 'காவிரியாறானது மாறாமல் நீர் பெருகி நாட்டை வளம்பெறச்செய்தாலும்உயிர்கள் எக்காரணத்தாலோ வருந்துகின்றன. ஆதலால், பாற்கடல் தந்த அமிழ்தைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பதுபோல், மிகப் பயன்படுவதான இவ்வமுதசுரபியைச் சும்மா வைத்திருத்தல் தகுதியன்று,' என்று கூறினர்.
அதுகேட்ட மணிமேகலை அவரை வணங்கித் தொழுது அப்போதே பிக்குணிக் கோலம்பூண்டு அப் பாத்திரத்தைக் கையிலேந்திப் பெருந் தெருவிற் போய்ச் சேர்ந்தாள்; மணிமேகலையைப் பலருஞ் சூழ்ந்தனர். அப்பொழுது மணிமேகலை, "கற்புடைய மாதர் இடும் ஐயத்தையே முதலில் ஏற்பது தகுதி," என்று சொல்ல, காயசண்டிகை, "கற்புடைய மாதர்களுள் மிக மேம்பட்டவளாகிய ஆதிரையின் மனை இது; நீ இதிற் புகவேண்டும்," என்று அவட்குக் கூறினாள்.
அவ்வாறு கூறி, காயசண்டிகை, ஆதிரையின் வரலாற்றை விரித்துரைத்து, 'அவன் கற்புமிக்கவளாதலால், அவள் கையில் முதலில்