தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


அணிந்துரை

ஊர்புனற் குடைந்ததே போல்; ஆடியுட் பாவைபோல்; சீருறு சிலம்பி நூலாற் சிமிழ்ப்புண்ட சிங்கம்' என்றின்னோரன்ன தீஞ்சொற் றொடைகள் இடந்தொறும் இடந்தொறுங் காணப்பட்டுக் கற்போர்க்குக் கழிபேரின்பம் நல்குவனவாம்.

இனி, சீவகசிந்தாமணியின்கண் சங்க இலக்கியங்களின் நலமெல்லாம் தகுந்த தகுந்த இடங்களிலே பொருத்தி அழகு செய்யப்பட்டிருக்கின்றது. தமிழருடைய ஒப்பற்ற நூலாகிய திருக்குறளைத் தகுந்த இடமறிந்து வித்தகம்படக் கையாண்டுள்ள திறத்திலே இச் சீவக சிந்தாமணியே தலைசிறந்து திகழ்கின்றது. தேவர் தமது இலக்கியத்திற்குத் திருக்குறளையே உயிராக அமைத்திருக்கின்றனர். மற்றும் பாட்டும் தொகையுமாகிய ஏனைய சங்க நூல்களினின்றும் எடுக்கப்பட்ட பொருளும் சொல்லும் சிந்தாமணியில் மிக நயமாகப் பொருத்தப்பட்டிருக்கின்றன. இன்னும் சிந்தாமணியின்கண் பண்டைக்காலத்து இலக்கிய நெறியாகிய அகப்புறப் பொருள் நெறிகள் பெரிதும் போற்றப்பட்டிருக்கின்றன. இக்காரணத்தால் பண்டைய உரையாசிரியன்மார்க்கெல்லாம் சிந்தாமணி ஒரு சிறந்த எடுத்துக் காட்டு நூலாகவும் திகழ்வதாயிற்று.

இனி, கவிவரர் சுப்பிரமணிய பாரதியார் "திறமுடைய புலமை எனிற் பிற நாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்" என்று பாடியதற்கிணங்க நமது சிந்தாமணியை ஓதியுணர்ந்த பிறநாட்டறிஞர் அதுபற்றிக் கூறும் பாராட்டுரை ஒரு சில காட்டுதும் ; காண்மின்.
 

"திருத்தக்கத்தேவர் தமிழ்க் கவிஞருள் சிற்றரசர்."
 
:- வீரமாமுனிவர் 
இத்தாலியப் பேராசிரியர்
.
"சீவகசிந்தாமணி இப்பொழுதுள்ள தலைசிறந்த தமிழிலக்கியச் சின்னமாகும்; தமிழ்ப்பொருள் காதற் காப்பியம் ; உலகப் பெருங்காப்பியங்களுள் ஒன்று."
 

டாக்டர் ஜி. யூ. போப்பு
.

"சிந்தாமணி எல்லாத் தமிழ் இலக்கியங்களுள்ளும் பழைமையானது. சமணத்தை விளக்குவதற்காக இயற்றப்பட்டது. அஃது இலக்கியச் சிறப்பு மிக்கது; இச் சிறப்பின்றேல் இது பண்டே மறைந்து போயிருக்கக்கூடும். அதன் ஆசிரியர் நடை, ஒரு தனி நடையாகும். அஃது ஓர் உயரிய இலக்கிய நூலாக அமைந்துளது."
சூலியேன். வேன்சோன்.  
பிரஞ்சுப் பன்மொழி யாராய்ச்சியாளர்.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 08:00:42(இந்திய நேரம்)