Primary tabs
உறுதிப் பொருள் பலவற்றையும் சிந்தாமணி வழங்கும் மாண்புடையது என்னலாம். அழகாலே பன்னிற மலர்களும் மலர்ந்துள்ளதோர் அழகிய பூம்பொழிலை யொப்பது. பயனாலே பல்வேறு தீஞ்சுவைக் கனிகளும் நல்கும் பழுமரமங்கள் செறிந்ததொரு பழத்தோட்டமே இப் பெருங் காப்பியம் என்போம்.
தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக ஆட்சியாளர் திருவாளர் வ. சுப்பையா பிள்ளை யவர்கள், இந்தப் பெருங் காப்பியமும் இதற்கமைந்த நச்சினார்க்கினியர் நல்லுரையும் கற்று வல்லார்க்கன்றி ஏனையோர் அறிவதற் கரியனவாயிருத்தல் கருதி நச்சினார்க்கினியர் நல்லுரையையே தழுவி யாவர்க்கும் எளிதிற் பொருள் விளங்கும்படி இப்பொழுது ஒரு புத்துரை வரைவித்து விளக்கவுரையும் கூட்டி வெளியிடுகின்றார்கள். இதற்கு ஒரு முன்னுரை வரைந்து தரும்படி எனக்குப் பணித்தார்கள். சிந்தாமணியினைப் போற்றிப் பயிலுமவர்களுள் யானும் ஒருவனே யாயினும் அஃது எனக்குத் தரும் இன்பத்தினை எழுதிக்காட்ட வல்லேன் அல்லேன். காவியவின்பம் பெரும்பாலும் காதலின்பத்தையே ஒத்திருக்கின்றது. கருத்தொத்து ஆதரவுபட்ட காதலரை நோக்கி ‘நீயிர் நுகர்ந்த இன்பம் எத்தகையது' என்று வினவினால் அவர் எங்ஙனம் சொல்லிக்காட்ட வியலும் ? சீவக சிந்தாமணியின் இலக்கிய வின்பமும் அப்படிப்பட்டதே என்பதில் ஐயமில்லை. விளங்கவில்லை என்று குறை கூறுவதற்கு இடமில்லாமல் திருவாளர் பிள்ளையவர்கள் இப்பொழுது இப்புதியவுரையினாலே செய்துவிட்டார்கள். இந்த அருமுயற்சிக்குத் தமிழுலகம் பிள்ளையவர்கட்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது. இனி நாம் செய்யவேண்டியது அந்த நூலை நன்கு பயின்று அது தரும் பேரின்பத்தை நுகர வேண்டும்; அத்துணையே . அந்தப் பயிற்சி நம்மை இம்மையிலேயே வானவராக்கிவிடும்.;
வாழ்க சிந்தாமணி ! வாழ்க திருத்தக்க மாமுனி !
வாழ்க செந்தமிழ் !