தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


எனவும் வரும் மெய்ஞ்ஞான விளக்கத்தானும் உணர்க,

இவ்வாறு தந்தீவினைக் கிரங்கு நரகர் அதன் தீர்வுகருதி இறைவன்
அடிகளை ஒருதலையாக ஏத்துவர் என்க,

திலகம் - நெற்றிச்சுட்டி, அறிஞர் தம் நெற்றியிலிடுதற்கியன்ற, திலகம் போன்ற அடிகள் எனினுமாம், திறல் அறிவன் - முற்றறிவினை உடைய இறைவன் ; இதனைக் ‘கேவலஞானம்’ என்பர். மூவுலகத்துமுள்ள உயிர் முதலிய பொருள்களின் முக்கால நிகழ்ச்சிகளையும் ஒரே சமயத்தில் ஒருங்கே அறியும் ஆற்றலுடைமையின் இறைவன் அறிவினைத் திறல் அறிவு என்றார்.

“உலகுணர் கடவுள்” அன்று திருத்தக்க தேவரும் (சீவக-2719) “உலகம் மூன்று மொருங்குணர் கேவலத் தலகிலாத அநந்த குணக் கடல்” என்று (கடவுள் வாழ்த்து) யசோதரகாவியமுடையாரும் ஓதுதலுணர்க.

இனி, உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண் திலகமாய திறலறிவன் அடி என்று பொதுவி னோதியதன்றி அருகன் என்னாமையின் அருகக் கடவுளின் அடிகள் என்றுரை கூறியதென்னையோ? எனிற் (சமண சமயத்துப் பேராசிரியர் உரை கூறுமாறு) கூறுதும் :-

உலகத்துச் சான்றோரால் வணங்கப்படுபவர் இன்னாசெய்யாமையும், பொய் கூறாமையும், கள்ளாமையும் காமமில்லாமையும் பற்றின்மையும் முதலாகிய குணங்கள் உடையார் அல்லரோ. இக்குணங்கள் முழுதும் உடையான் அருகக்கடவுளேயன்றி வேறு சமயக்கணக்கர் கூறும் இறைவர்க் கெல்லாம் இக் குணங்களின்மையான் “உலகம் முன்றும் ஒருங்குடன் ஏத்தும் மாண் திலகம் ஆய திறல் அறிவன் என்பது அருகக் கடவுளுக்கே பொருந்துவதாயிற்று என்க.

இனி, இறைவன் அடிவணபகுதலின் குறிக்கோள், வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றலே ஆதலின் அதனையே குறித்தார். வழுவில் நெஞ்சம் பெறுதற்கு இருள்சேர் இருவினையும் அகலுதல் இன்றியமையாமையின் “தொல்வினை நீங்கவும்” என்றார், தொல்வினை நீங்க என்றும் எனல் வேண்டிய எண்ணும்மை செய்யுள் விகாரத்தாற்
றொக்கது. (1)



 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 08:10:03(இந்திய நேரம்)