Primary tabs
அவை அடக்கம்
தீக்குற்ற காத லுடையார்புகைத் தீமை யோரார்
போய்க்குற்றமூன்று மறுத்தான்புகழ் கூறு வேற்கென்
வாய்க்குற்றசொல்லின் வழுவும்வழு வல்ல வன்றே.
(இ - ள்) நோய்க்கு உற்ற மாந்தர் - பிணிகட்கு உறைவிடமாகப் பொருந்திய மக்கள் : மருந்தின் சுவை நோக்ககில்லார் - அப்பிணி தீர்தற்குக் காரணமான மருந்தினது சுவை இனிதோ? இன்னாதோ? என்று ஆராய்வாரல்லர், தம் பிணி தீர்தல் ஒன்றே குறிக்கொள்வர்; தீக்கு உற்ற காதல் உடையார் - குளிரால் வருந்தித் தீக்காயும் அவாவுடையோர்; புகைத்தீமை ஓரார் - அத்தீயின் கண்ணதாகிய புகை தமக்குச் செய்யும் தீமையை ஒரு பொருளாகக் கொள்ளார்; போய்க் குற்றம் மூன்றும் அறுத்தான் - அரசவின்பத்தையும் துறந்துபோய் மனமொழி மெய்களால் விளையும் மூவகைக் குற்றங்களையும் அறுத்தவனாகிய புத்ததேவனுடைய புகழ் கூறுவேற்கு - புகழைப் பாடுகின்ற என்பால்; வாய்க்கு உற்ற சொல்லின் வழுவும் - அறியாமை காரணமாக என்று வாய்க்கு, இயல்பாகவமைந்த சொற்களின் குற்றங்களும்; வழுஅல்ல - அப்புத்தன்பால் அன்புடையாராய் அவனறங் கொண்டுய்ய வெண்ணும் சான்றோருக்குக் குற்றங்களாகமாட்டா; என்பதாம்.
(வி - ம்)நோய்க்குற்றமுடைய மாந்தர் எனினுமாம். நோயுடையோர் தம்நோய்தீரக் கருதுவதல்லது அந்நோயின் தீர்வு கருதித் தாமுண்ணும் மருந்து இனிதோ? இன்னாதோ? என்று ஆராய்வதிலர். எனவே, பிறவிப் பிணிக்கு மருந்தாகிய புத்த தேவருடைய அறத்தையே கூறுகின்ற எமது நூலின்கண் அவ்வறத்தையே நோக்குவதல்லது என் அறியாமை காரணமாகவுண்டாகிய குற்றங்களை நோக்கி இந்நூலை இகழ்வாரல்லர். ஆதலால் யானுமிந்நூலைச் செய்யத் துணிந்தேன் என்பது கருத்து. தீக்குற்ற காதல்......ஓரார் என்பதற்கும் இங்ஙனம் கூறிக்கொள்க.
தீக்குற்ற காதலுடையார் என்றது குளிரால் வருந்தித் தீக்காய அவாவுவோரை. புகைத்தீமை - புகையாலுண்டாகுந் துன்பம். அவை மூச்சு முட்டுதல்; கண்கரித்தல் முதலியன.
போய் என்றது அரசவின்பத்தைத் துறந்துபோய் என்றவாறு.
மூன்று குற்றம் - மெய் மொழி மனம் என்னும் மூன்றிடத்தும் தோன்றுகின்ற மூவகைக் குற்றங்கள். இவற்றுள் மெய்யிற்றோன்றுங் குற்றங்கள் கொலை களவு காமம் என்பன மொழியிற்றோன்றுவன பொய் குறளை கடுஞ்சொல் பயனில்சொல் என்பன. மனத்திற்றோன்றுவன - வெஃசுல், வெகுளல், பொல்லாக் காட்சி என்பனவாம். என்னை?
ஆய்தொடி நல்லாய் ஆங்கது கேளாய்
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா வுடம்பிற் றோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொற் பயனில்
சொல்லெனச் சொல்லிற் றோன்றுவ நான்கும்
உள்ளந் தன்னில் உறுப்பன மூன்றும்”
எனவரும்
மணிமேகலையானும் உணாக்.
இனிக் குற்றம் மூன்றும் என்பதற்கு “காமம் வெகுளி மயக்கம்”
என்னும் மூன்று குற்றங்களையும் எனினுமாம். என்னை?
“யாமே
லுரைத்த பொருள்கட் கெல்லாம்
காமம் வெகுளி மயக்கங் காரணம்” -- மணி, 30 - 5 - 12
எனப் பௌத்தநூல் கூறுதலும் காண்க. இனி, திருவள்ளுவனாரும்,
“காமம்
வெகுளி மயக்க மிவைமூன்றன்
நாமங் கெடக்கெடும் நோய்” --குறள், 390
என்றோதுதலும் காண்க.
இனி மூன்று
குற்றம் என்பதற்குப் பௌத்தர் துறவோர்க்கு
மட்டுமே உரிய குற்றங்களாகக் கூறுகின்ற அவாவும் பற்றும்
பேதைமையும் ஆகிய மூன்றும் எனினுமாம். என்னை?
“குலவிய
குற்றமெனக் கூறப் படுமே
அவாவே பற்றே பேதைமை யென்றிவை”
--மணி, 30 : 149 - 70
என்றும் ஓதுபவாகலான்.
இது பேதைமை முதல் பன்னிரண்டாக விரித்துக் கூறியதனை மூன்றாகத் தொகுத்தோதியபடியாம் இவற்றை ஆசிரவம் என்றும் கூறுப. என் வாய்க்குற்ற சொல்லின் வழு என்றது. அறியாமை காரணமாக இயல்பாகவே என் வாய்க்குப் பொருந்திய சொற்குற்றம் என்றவாறு. (2)