Primary tabs
கொடுப்பார்களும் இல்லை மாதோ" எனவுங் கூறிய கருத்திற் கியைந்துள்ளது.
19 ஆம் கவியில் 'புனற்சிறையே யன்றிச் சிறைவேறு இல்லை' யென்றும், 'பேதையர் சிற்றிடைக் குறையே யன்றி, வேறு குறை அந்நகர மக்கள்பால் இல்லை' யென்றும் நுட்பமாகக் கூறியிருக்கும் திறம் நோக்குவோர்க்கு ஆசிரியர் நுண்மாணுழைபுலமுடையார் என்பது தெற்றென விளங்கும்.
விவாக காண்டத்திற் 'பாலைவனங் கண்டான் அரிச்சந்திரன். அப்பாலை வழியே கன்னோசி நாட்டுக்குச் செல்கிறான்' என்று கூற வந்தவர் பாலைவனத்தின் சிறப்புப் பகர்கின்றார். அப் பாலைவனத்தில் மான்கள் பருக நீரின்றி யலையும், கானல்பரந்த வெளி; நீர் நிறைந்த வாவிபோலத் தோன்றும்; செல்லச் செல்ல நீர் காணாமல் அலைந்து திரியும். அம் மானினங்கள் அலைந்து திரிவதும், கானல்நீர் காட்டாமல் மறைந்து விடுவதும் உலகத்தில் இரக்கமில்லாச் செல்வர் இரப்பவர்க்குக் கொடாமற் பொருளை மறைத்துவைத்து நாடோறும் தம்பால் வந்து வந்து அலைந்து திரியும்படி வருத்துவதுபோல இருந்தது' என்று உவமை காட்டுகின்றார். "இரப்பவரை நித்தலு நடத்தியுமொ ரற்பமுமிரக்க மிலர்பாற், பரப்பவரை யொத்தன கரப்பவரை யொத்தன பசாச ரதமே" என்னுந் தொடரைக் காண்க. எத்துணை யழகான உவமை இது! உற்று நோக்குமின்! உலகிற் பொருளை யீட்டி வறிதே வைத்து இரப்பவர்க்குதவாது வாழ்வார்க்கும், அவர் தன்மை யறியாது அவர்பின் அலைந்து திரிவார்க்கும் அறிவுறுத்தியதன்றோ இது! எல்லார்க்கும் எளிதில் விளங்கும் உவமையை யமைத்ததுவுமாம். பாலைவனத்தின் வெம்மையை யெடுத்துக் கூறாமல் தானே தோன்றுமாறு செய்கிறார். அலைகடல் நடுவிலுள்ள வடவைக்கனலை நீக்கிவிட்டு் இப் பாலையிலுள்ள வெண்மணல் ஒன்றை அக் கடலில் வைத்தாற் போதும்; கடல்நீர் முழுவதையும் வறிதாக்கி மேல் வானவர் உலகத்தையும் எரித்துவிடும். யுகமுடிவில் எழும் வெள்ளத்தை விழுங்குவதற்கு இம் மணல் ஒன்று தெறித்து விழுந்தாலும் போதும்; அத்தகைய வெம்மையுடையது என்கிறார். இது கலிங்கத்துப்பரணி, "அணிகொண்ட குரங்கினங்கள் அலைகடலுக் கப்பாலை, மணலொன்று காணாமல் வரையெடுத்து மயங்கினவே" என்ற கவியின் கருத்தினை யொட்டியதாகும். ஒரு மணல் கண்டு எடுத்துப் போட்டால் கடல் வற்றிவிடும். அணை கட்டவேண்டி மலையெடுத்துத் தலைசுமந்து திரிய வேண்டிய துயரமில்லை. குரங்கினங்கட்கு அறிவில்லையே! எனப் பரணி யாசிரியர் இரங்குவதுபோலக் கூறியதினும் இது சிறந்தது; இந்திரனுலகினையும் எரித்துவிடும் என்று கூறியதால். அரிச்சந்திரன் காளி தேவியை வணங்கிக் கற்றேர் பொற்றேர் ஆயதற்குக் காரணம்