தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


இருக்கை தந்து 'மீண்டும் என்பால் வந்தது என்ன?' என்று வினவினன். 'அயோத்திமன்னன் அரிச்சந்திரன் நின் புதல்வியை மணக்க விரும்புகின்றான்; வேந்தர் யாவரினும் சிறந்த வேந்தனாகிய அவனுக்கே கொடுப்பது நலம். இதனைக் கூறவே வந்தோம்' என்றனர். மதிதயன் ஆராய்ந்து முனிவரை நோக்கி, 'எமது கடவுள் கூறிய மறைமொழி யொன்றுளது; அதன்படி யமைந்தவரே என் மகட்குக் கணவராவார். ஆயினும், அரிச்சந்திரனை இங்கு வருமாறு கூறுங்கள்' என்றுரைத்து முனிவரைப் போக்கினான். பின்னர்ச் சந்திரமதிக்குச் சுயம்வரம் இன்னநாள் என்று குறித்து, மணவோலையும் தூதுவரையும் பலநாட்டரசர்பாற் செலுத்தினன். சுயம்வரநாட்கு முன்னரே மன்னர் யாவரும் மதிதயன் நகரத்திற்கு வந்தடைந்தனர். அரிச்சந்திரனுக்கு முனிவர் வந்து மதிதயன் கூறிய மொழியைக் கூறினர். மணவோலையும் வந்தது. யானை, தேர், பரி, காலாட்களுடன் புறப்பட்டான் அரிச்சந்திரன். வசிட்டன் முதலிய முனிவர் பலரும் அயனாட்டு மன்னர் பலரும் உடன்வந்தனர். சரயுநதி கோமதியாறு கடந்து அதன் கரையிலுள்ள வண்டலில் ஓரிரவு தங்கினர் யாவரும். விடிந்தபின் எழுந்து நடந்து ஒரு பாலைவனத்தைக் கண்டனர். அப் பாலைவனத்துட் செல்லும்போது அந்நிலத் தெய்வமாகிய கொற்றவை ஆங்குக் கோயில் கொண்டிருப்பது கண்டான் அரிச்சந்திரன். தன் படைகள் எல்லாவற்றையும் புறத்தே நிறுத்தி, முனிவர் மன்னவர் முதலியவரோடு கோயிலுட் புகுந்து கொற்றவையை வணங்கினன். அடுத்து நின்ற தேரை நோக்கினன். அது முதலிற் கற்றேராகக் கண்ணுக்குத் தோன்றியது. கூர்மையாகப் பார்க்கப் பார்க்கப் பொற்றேராகிப் பொலிந்தது. அத்தேரிற் பூட்டிய கற்பரியும் கற்சிலையும் கற்கணையும், பொற்பரியும் பொற்சிலையும் பொற்கணையும் ஆயின. அரசன் கண்டு காரணம் அறியாது திகைத்து மயங்கி நின்றான். தெய்வம் கோயிலினுள்ளிருந்து புறத்துவந்து நின்றது. 'கற்றேர் பொற்றேராய காரணம் யாது?' என்று அறிவிக்குமாறு அத் தெய்வத்தை வேண்டினன். "வருணன் தனது பொற்றேரை என் வாயிலிற் கொண்டுவந்து நிறுத்திக் கற்றேராக்கிச் சென்றான். அவன் 'இக் கற்றேர் யார் கண் பட்டபோது பொற்றேராகுமோ, அவர்க்கே இத் தேரைக் கொடுத்துவிடுக' என்று கூறினன். ஆதலால், இப் பொற்றேரை நீயே வைத்துக்கொள்" என்று கூறி மறைந்தது. உடனே அப் பொற்றேரிலேறிக் கன்னோசி நாட்டையடைந்தான். மதிதயன் அரசிருக்கை மண்டபம் அடைந்தான். மாமன் மருகனைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தான். 'தெய்வத் திருவருள் கூட்டுவித்தால் நம் புதல்வி மாதவமுடையவளே; நாமும் மாதவமுடையவராவோம்' என்று மனத்துள் எண்ணி வருந்தியிருந்தான்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:42:18(இந்திய நேரம்)