Primary tabs
அரிச்சந்திரனைக் கண்ட அரசர் யாவரும் இளமையும் வனப்பும் தோற்றமும் ஏற்றமும் நோக்கிக் கண்கள் இமையாதிருந்தனர். பாங்கிமார் பலரும் பார்த்துக் கண் களித்துத் தம் தலைவி சந்திரமதிக்குக் கூறுவதற்கு ஓடினர். விரைந்துவந்த சேடியரை என் என வினவினள் சந்திரமதி. 'நங்காய்! நின்னை மணப்பது கருதி வந்த மன்னர் பலரைக் கண்டோம் நாம். அன்னவரிற் சிறந்த பேரெழில் வாய்ந்தவன் அரிச்சந்திரனே! அவனுக்கு முன் எவர் நிற்பினும் சூரியன்முன் மின்மினிபோல ஒளிமழுங்கித் தோன்றுவர். இஃது யாம் கண்டுவந்த புதுமை! இதனைக் கூறவே விரைந்தோடி வந்தோம்' என்றனர். சந்திரமதி யுள்ளத்தில் அரிச்சந்திரன் உறைந்தான் அப்போதே! அவளும் காதல் கொண்டு புலம்பி அன்றிரவைக் கழித்தாள்.
குறித்த சுயம்வர நாளில் மணமண்டபம் அலங்கரிக்கப்பட்டது. அண்மையிலும் சேய்மையிலும் உள்ள பலநாட்டு மன்னரும் ஆங்கு வந்தமர்ந்தனர். சந்திரமதி தோழியரிற் சிறந்தவள் ஒருத்தி, மன்னர் நாடும் வளமும் சிறப்பும் பெயரும் தெரிவித்து அழைத்துச் சென்றனள். அரிச்சந்திரன் பெயர் கூறியவுடன் சந்திரமதி கழுத்தை நீட்டி எட்டிப் பார்க்கத் தொடங்கினள். அவள் கழுத்தில் திருமங்கிலியம் இருப்பது கண்டான் அரிச்சந்திரன்! எழுந்து மதிதயன் முகத்தை நோக்கினன். 'கன்னியென்று கருதி வந்தனம்; மங்கலவணி பூண்ட மடந்தையாக இருக்கின்றாள்! முன் ஒருவருக்கு மணமுடித்த பெண்ணை இரண்டாவது மணமுடிப்பது மன்னர் மரபன்றே! சிறியோர் செய்தொழில் இது! நீர் செய்யத் துணிந்தது என்ன?' என வினவினான். மதிதயனுக்கு மட்டில்லா மகிழ்ச்சி எழுந்தது! தோன்றாமலடக்கினன். அவைக் கண்ணமர்ந்த அரசரை நோக்கினன். 'அரிச்சந்திரன் பொய் கூறாதவன் எனப் புகழ் பெற்றவன்; பொய் கூறுவதைக் கேளுங்கள் என புதல்வி கண்டத்தில் மங்கலநாண் இருக்கிறதா உற்று நோக்குங்கள்'! என்றான். எல்லாரும் 'இல்லை; அரிச்சந்திரன் கூறுவது பொய்யே!' என்றனர். பின்னர் மதிதயன் அவையோரைக் கையமர்த்தி வரலாறு கூறத் தொடங்கினன்.
"மன்னர்களே! அரிச்சந்திரன் என் புதல்வி கழுத்தில் மங்கிலியம் இருக்கக் கண்டான். உங்களிலொருவருக்கும் அது தோன்றவில்லை. இதற்கு ஒரு காரணமுண்டு. சிவபெருமான் வரத்தாற் பிறந்தவள் என் செல்வி. அவள் பிறந்தபோதே மங்கலநாணும் உடன் தோன்றியது. 'கண்ணாடியிற் காணக்கூடும்! கையினாற் பற்ற அகப்படாது! எவர் கண்ணுக்குந் தோன்றாது இம் மங்கிலியம்! எவன் கண்ணுக்குத் தோன்றியதோ, அவனே இவட்குக் கணவன் ஆவான்!' என்று இறைவன் கூறிய மறைமொழியுளது. ஆதலால், அரிச்சந்திரனே மணவாளன் என அறிந்துகொள்க" என்றான். கூறியபோதே