தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


சந்திரமதியும் மணமாலையைச் சுழற்றியெறிந்தாள்! அம் மாலை அரிச்சந்திரன் கழுத்தில் விழுந்தது. மன்னரெல்லாரும் முகம் வாடி எழுந்து விரைந்து தம்மூர் சென்றனர். அரிச்சந்திரனும் சந்திரமதியும் ஆடல் பாடல்களுடன் அழைத்துச் செல்லச் சென்று பள்ளியறை புகுந்தனர். இன்பந்துய்த்து இனிது பன்னாள் ஆங்கிருந்தனர். பின் அயோத்திக்குச் சென்று இல்லறம் நடத்தி ஊடலும் கூடலும் நிகழப் புனலாடிப் பொழில் விளையாடி இன்பப் போது போக்கினர். சந்திரமதி சூல் கொண்டு மைந்தனை ஈன்றாள். தேவதாசனெனப் பெயரிட்டுச் செல்வனை வளர்த்தனர்.

இவர்கள் இவ்வாறு வாழுங்காலத்தில் இந்திரனுலகத்தில் இவர்களை யறியாமல் ஒரு செய்தி நிகழ்ந்தது. இந்திரன் அவைக்களத்திற் பல முனிவர்களும் தேவர்களும் வந்து கூடியிருந்தனர். ஒருநாள் இந்திரன் அவர்களை நோக்கி, 'மண்ணுலகில் வாழும் மன்னர்களில் வாய்மை முதலிய நற்பண்புகளுடன் செங்கோல் வழுவாது அரசு புரியும் சிறந்த மன்னன் யாவன்?' என வினவினன். வசிட்ட முனிவர் 'அரிச்சந்திரனே அத்தகைமையுடையவன்' என்றனர். விசுவாமித்திரர் எழுந்து 'அவன் பொய் முதலிய தீக்குணங்களுடையான்; அவனை நல்லவன் என இப் பேரவையிற் கூறியது என்ன பயன் கருதியோ!' என்று சீறி யுரைத்தார். 'இருவருக்கும் சொற்போர் மூண்டது. இந்திரன் இடைநின்று விலக்கி 'நீங்கள் இருவரும் கூறியவாறு மெய்ப்பிக்கவேண்டும்; இல்லையெனின், நீங்கள் செய்வது என்னை?' என்று வினவினன். வசிட்டர் 'அரிச்சந்திரனைப் பொய்யனாக்கிக் காட்டினால் நான் கட்குடத்தைச் சுமந்து தென்றிசை செல்வேன்; என் தவத்தையும் ஒழித்துவிடுகின்றேன்' என்றான். விசுவாமித்திரன் 'நான் செய்த தவத்திற் பாதி கொடுப்பேன்' என்று வஞ்சினங் கூறினன். 'இச் செய்தி மறைபொருளாக இருத்தல் வேண்டும்; நாரத முனிவரும் எங்குஞ் செல்லக்கூடாது' எனக் கூறி, இந்திரன் கோசிகனை மட்டுஞ் சென்று அரிச்சந்திரனைப் பொய்யனாக்கச் செய்யவேண்டுவன செய்க; என உரைத்தான்.

கௌசிகன் மண்ணுலகத்திற்கு வந்தான்; வஞ்சனை செய்ய வழியாய்ந்தான். முதலிற் சில முனிவர்களை மன்னனிடம் விடுத்து வேள்விக்குப் பொருள்வேண்டி வருமாறு கூறினன். அவர்கள் சென்று அவ்வாறே உடன்பாடு பெற்று வந்தனர். பின்னர் அரிச்சந்திரனை நேரிற்கண்டு 'வேள்விக்குப் பொருள் கொடு' என்று கேட்டான். அவன் 'எவ்வளவு பொருள் வேண்டும்?' என வினவினன். 'யானைமேல் நின்று ஒருவன் எறிந்த கவண் கல் சென்ற உயரம் பொருள் குவிக்க வேண்டும்' என்றான். அவ்வாறு செய்ய யானையை வரவழைக்கும்போது 'இப்போது பொருள் வேண்டாம்; வேள்வி செய்யத் தொடங்கும்போது நான் வந்து பெற்றுக்கொள்வேன்' என்றுரைத்துச் சென்றான். பின் ஒரு மரத்து


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:42:37(இந்திய நேரம்)