தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium


திருக்கோவலூர், ஸ்ரீ பாணிபத்ர தேசிகராதீன மடம்,

வித்வான், ஆ. பழநிஸ்வாமி சிவாசார்யரவர்கள் எழுதியது

இந்நூலுரையாசிரியர் வீடுர் திரு. பூர்ணசந்திரநயினாரவர்கள் ஒரு புரட்சிக்காரர். பயந்து விடாதீர்கள். அரசியற்புரட்சிக்காரர் அன்று; புரட்சிகரமான உரை யெழுதியவர். அவ்வளவுதான். கால வெள்ளத்திலே, புதியன கழிதலும் பழையன புகுதலும் காலவகையான் வழுவிலவாய் நாகரிகப்பாங்கு ஆதல் போலப் பழைய மதக் கருத்துக்களை, திட்பநுட்பஞ் சிறந்தவற்றை யெடுத்துக்காட்டியிருக்கிறார்

ஜைன நூலுக்கு ஒரு ஜைனரே உரை யெழுதுவது மிகப் பொருத்த முடைத்து. மதக் கொள்கைகளையும், அனுஷ்டான முறைகளையும் அவர் நன்கு அறிதல் கூடுமென்பது மறுக்க முடியாததொன்று. சமண நூல்கள் பெரும்பாலும் வடமொழியை அடிப்படையாகக் கொண்டிருத்தலின் அம்மொழிப் பயிற்சியுடையார் உரை வகுப்பது மற்றுமொரு பொருத்தம். இவ்விரண்டும் இவர்பால்உள்ளனவாதலின் இவருரை பாராட்டத் தக்கது.

எடுத்துக்காட்டாக, பாடல் 23-ல் “தீர்த்த வந்தனை“ யென்பதன் பொருளையும், பாடல் 27-ல் “குல்லக வேடம்“ என்பதன் விவரத்தையும், பாடல் 38-ல் உயிர்களுக்கு இயல்பான பிறப்புக்களில் வரும் அங்க அளவு விரிவையும், பாடல் 53ல் “திருமொழி“ யென்பது திவ்யத்வனியாகு மென்பதையும் பார்க்கலாம்.

55ம் பாடலில், “தீமைப் பங்கவிழ் பங்கமாடி“ என்ற பாடபேதம் மிகப் பொருத்தமா யிருக்கிறது. பங்கம் என்பது சப்தபங்கி நயம் என்ற சமண சமயத் தத்துவ ஆராய்ச்சியைக் குறிக்கிறது.

110ம் பாடலில், “இகுளையானே தரப்படு சாரனோடு“ என்ற பாடம் ஏற்புடைத்து, தரப்படு என்ற செயப்பாட்டு வினைக்கு இகுளையான் என்ற மூன்றாம் வேற்றுமைக் கருத்தா மிகப் பொருந்துவதாயுள்ளது. “சாரனோடு“ என்பதே, “அகல்யாவை ஜார“ என்ற இந்திரனைக் குறிக்கும் வேதமந்திரம் போலக் கருத்தை விளக்கி்விடுகின்றது. ‘யானை தரப்படு‘ என்ற அடைமொழி இன்றியமையாத நிலையில் வேண்டப்படுவதில்லை.

312ம் செய்யுளில், “செய்த வெந்தியக் கொலை“ என்னும் தொடரில், தியக் என்று பதப் பிரிவு செய்து, ‘திர்யக்’ (விலங்கு- மிருகம்) என்பது, தியக் என வந்தது என்று கொண்டு, மாக்கோழியெனப் பொருள் செய்வது, வெந்தயச் சம்பா அரிசிமாவாலாகிய கோழி யென்பதினும் நன்றாயிருக்கிறது. மேருமந்திரம் முதலிய நூல்களில் “தர்மம்“ என்ற சொல் ‘தம்மம்’ என ரகர மெய் மாறிவரக் காண்கிறோம். அவ்வாறே திர்யக் என்பதிற்கூட ரகரமெய் நீக்கம் வடமொழித் திரிபே. இது இவ்வுரையாசிரியரின் வடநூற்பயிற்சிக் கொரு சான்று.

65ம் பாடலில் ‘கருதிற்றுண்டேல் அருளியல் செய்து‘ என்ற தொடர்க்கு, அரசனுக்கு இடித்துரைத்தலாகச் சொல்லும் கருத்து சுவையுடையது.

இன்னோரன்ன பலவற்றாலும் சிறந்திருத்தலின், இவ்வுரையைப் பொதுவில் தமிழுலகமும், சிறப்பாக ஜைன சமுதாயமும் வரவேற்கும் என்னும் நம்பிக்கையோடு, நண்பர் பூர்ணசந்திர நயினாரவர்களை இத்தகைய பணியில் மேன்மேலும் ஊக்கிவிடத் தமிழ்நாடு முன்வர வேண்டுமென்று வி்ரும்புகின்றேன்.


திருக்கோவலூர்
வித்வான், திரு. ஆ. பழனிஸ்வாமி சிவாச்சாரியர்

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 11:24:32(இந்திய நேரம்)