தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium


பேராசிரியர், பன்மொழிப்புலவர்,

திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் எழுதியது

நண்பர் பூர்ணசந்திர நயினாரை யான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தொண்டாற்றிய போது அறிந்து அளவளாவ நேர்ந்தது. சூளாமணியில் எனக்கு இருந்த ஈடுபாடு அந்த நூலின் ஏட்டுச்சுவடிகளைத் தேட என்னைப் பிடர்பிடித்து உந்தியது. எனது நண்பர் திரு. ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் திரு. பூர்ணசந்திர நயினாரிடமிருந்து சில ஏட்டுச் சுவடிகள் தருவித்து உதவினார். ஏட்டுச் சுவடிகளைப் பிரிய மனமில்லாத நயினார் நேரே அவற்றை அண்ணாமலை நகருக்குக் கொணர்ந்து என்னிடம் அடைக்கலப் பொருளாகத் தந்த காட்சியை என்றும் நான் மறவேன். ஜைனமதத்தில் பிறழாத உறுதியோடு தம் நோன்புகளை நடத்தி வாழும் அவரது சிறப்பினையும் கண்டேன். ஜைன மத மரபு பிறழாதபடி ஜைன நூல்களுக்கு உரைகள் எழுதவேண்டும் என்ற பேர் அவாவால் துடிதுடிப்பதனையும் கண்டேன்.

இத்தகைய பெரியார் இன்று யசோதர காவியம் என்ற தமிழ்ச் சிறு காப்பியத்திற்குப் புத்தம் புதியதோர் உரை எழுதி வெளியிடுகின்றார். பழைய பதிப்புகளில் பல இடங்களில் ஜைன மரபுக்கு ஒவ்வாத பகுதிகள் இருக்கக் கண்டு இவர்மனம் புண்ணானதை யான் அறிவேன். இந்த உரையாலேனும் அந்தப் புண் ஆறும் என நினைக்கின்றேன். பழைய பதிப்பாசிரியர்களும் இந்தப் பதிப்பினை வரவேற்பார்கள் என யான் அறிவேன். தொண்டு ஒன்றே கருதி வெளிவரும் இந்தப் பதிப்பினையும் உரையினையும் தமிழ்நாடு வரவேற்கும் என்பதிலும் எனக்கு ஐயம் இல்லை.

வாழ்க யசோதர காவியம்; வாழ்க பூர்ணசந்திரனார்.

தெ. பொ. மீனாட்சிசுந்தரன்.


புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 11:26:54(இந்திய நேரம்)