Primary tabs
அச்சில் வரும் புதுநூல்-சைன காவியங்கள்-ஐம்பெருங் காவியம்-ஐஞ்சிறு காவியம்-நூற்றொகைப் பெயரின் பயன்- மூலப்படி - மூலப்படியின் நிலை - நூலும் உரையும்-காவிய அமைப்பு-கவிக் கூற்றால் கதை நடத்தல்-காவியப் பெயர்- காவியப் போக்கு-அருக சமயக் கோட்பாடுகள்-அருக தேவர் புகழ்மாலை-பெருங் காவியப் பண்பு - நாககுமார காவியமும் யசோதர காவியமும் - நாககுமார காவிய காலம்-பிறமொழிகளில் நாககுமார சரிதம்-காவிய ஆசிரியர்-நன்றியுரை.
அச்சில் வரும் புதுநூல்
தமிழ்க் காவிய வரிசையில்-சிறப்பாக சைன சமயஞ் சார்ந்த காவி யங்களுள் இதுகாறும் அச்சிடப்படாது எஞ்சி நின்றவற்றுள் ஒன்றே நாககுமார காவியம். இக் காவியம் இப்பொழுதுதான் முதன் முதலாக அச்சில் வெளி வருகிறது. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறை வெளியிடும் ‘தமிழாய்வு’ அரையாண்டு இதழிலே வெளிவரும் ‘அச்சில் வாரா அருந்தமிழ்’வரிசையில் இஃது இரண்டாவதாக இடம் பெறுகின்றது.
சைன காவியங்கள்
இப்பொழுது நமக்குக் கிடைக்கின்ற தமிழ் நூல்களுள் சிலப்பதிகாரம் சைனசமயச் சார்புடைய பழைய காவியம். சைன சமயக் கொள்கைகளை உலகிற்கு அறிவிக்க எழுந்த பிற காவியங்கள் பெருங்கதை, சீவக சிந்தாமணி, சூளாமணி, நீலகேசி, மேருமந்தர புராணம், யசோதர காவியம், உதயண குமார காவியம், நாககுமார காவியம், சாந்தி புராணம் முதலியனவாம். இவற்றுள் பெருங்கதை, சிந்தாமணி, சூளாமணி என்பவை ‘பெருங்காவியம் என்னும் வரிசையில் வைத்துப் போற்றத்தக்க இயல்புடையவை. ஏனையவை அத்துணை நடைச் சிறப்பும், பொருட் பொலிவும் விஞ்ச அமைந்தவை அல்ல. சைன சமயச் சார்பான உண்மைகள் சிலவற்றைச் சொல்லும் நோக்குடன் இவை இயற்றப்பட்டிருப்பதாலேயே