தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Nagakumara Kavium



நாககுமார காவியம்

மூலப்படியின் நிலை

திரு. சின்னசாமி நயினார் தமக்குக் கிடைத்த சிதைந்த மூல ஏட்டுப்படி யொன்றிலிருந்து எழுதிப் பல ஆண்டுகளுக்கு முன்பே வைத்திருந்தார். இந்நூலுக்கு ஓர் உரையெழுதவும் முனைந்து ஓரளவு செய்திருந்தார். இது குறித்துத் தச்சாம்பாடி திரு.ஜெ.சின்னசாமி நயினார் அவர்களுடன் கடிதத் தொடர்பு கொண்டு கேட்டதில் பின்வரும் செய்திகள் தெரிய வந்தன.

“அடுத்து வரும் ‘தமிழாய்வு’ இதழில் (பகுதி-2) நாககுமார காவிய வெளியீட்டின் முயற்சியைப் பெரிதும் வரவேற்கிறோம். அந்நூலை 20 ஆண்டுகட்கு முன் கிலமடைந்ததோர் ஏட்டுப் பிரதியிலிருந்து படிவம் எடுத்தேன்.  அக்கதை தமிழிலும் இல்லை. சமஸ்கிருத நூற்பயிற்சியும் எனக்கில்லை. புண்ணியாஸ்ரவ கதையைக்கொண்டு முதற் சருக்கத்திற்குக் குறிப்புரை எழுதினேன். இடையில் வேறோர் செம்மையான கதை (கையெழுத்துப் பிரதி)யைக் கொண்டு பொழிப்புரை வரைந்தேன். இரண்டும் ஏட்டுப் பிரதியில் இல்லை, என் முயற்சிதான். அம் முதற் சருக்கத்திற்கும் சமஸ்கிருத நாககுமார காவியம் பயின்றவர்களைக் கொண்டு செப்பஞ் செய்து விடலாமென விட்டு விட்டேன். அரும்பதவுரையை நீக்கி அதற்கும் பொழிப்புரை வரைந்து வெளியிடலாம்.” 

(21-11-72ஆம் நாள் கடிதம்)

இவர்கள் படியெடுத்த மூல ஏட்டுப் படியாகிலும் கிடைத்தால் விளங்காத பகுதிகளை மேலும் ஊன்றி ஆய்ந்து நோக்கலாம் என்று கருதினேன்.  அதனைப் படி செய்தவரிடமேகூட அஃது இன்று இல்லை என்பது,

“நாககுமார காவியமும் யானே ஏட்டுப் பிரதியிலிருந்து படியெடுத்தேன். கதைப் போக்கைக் கொண்டு ஊகமாகத் திருத்தியுள்ளேன்.  வேறு பிரதியொன்றை இயன்றவரை முயன்று தேடியும் கிடைக்கவில்லை.  கிடைத்த பிரதியும் மிகப் பழுதடைந்த பிரதியாதலின் கை தவறிப் போயிற்று” 

என்னும் திரு.சின்னசாமி நயினார் அவர்கள் 22-11-72ல் எழுதிய மற்றொரு கடிதத்தால் தெரியவருகிறது.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2017 17:46:35(இந்திய நேரம்)