Primary tabs
நூலும் உரையும்
மூலப்படியும் கிட்டாநிலையில், படியெடுத்தவர் ஊகமாகத் திருத்தி எழுதிய நிலையில் இந்நூலைச் செம்மையுற அமைத்துவிட்டோம் என்று சொல்வதற்கில்லை. ஓரளவு செம்மை செய்து மூலபாடம் தரப்பட் டுள்ளது. வேறு நல்ல சுவடி இனிக் கிடைக்கப்பெறுமேல், இந்நூல் மேலும் திருத்தமுற அமைதல் உறுதி. எனினும் இந்த அளவிலேனும் பழைய காவியம் ஒன்றை அச்சில் பதிப்பிக்க இயன்றதே என்பதை எண்ணும்போது ஓரளவு ஆறுதல் ஏற்படுகிறது.
திரு, சின்னசாமி நயினார் அவர்கள் இரண்டாம் சருக்கம் முதல் நூல் முழுமைக்கும் எழுதிய உரைப் பகுதியை ஒழுங்குபடுத்திச் செப்பஞ் செய்துள்ளேன். முதற் சருக்கத்திற்கு மட்டும் யான் பொழிப்புரை வரைந்து சேர்த்துள்ளேன். இவ்வாறாக இந்நூல் முற்றும் பொழிப்புரையுடன் இப்பொழுது வெளியாகிறது. இவ்வுரைப்பகுதி மூல நூற் கதையையும் ஆராய்ந்து எழுதப்பெற்றுள்ளமையால் பாடலின் நேர் பொழிப்புரையோடு தொடர்புடைய வேறு செய்திகளும் உடன் சேர்ந்திருக்கும். இக்காவியப் பொருள் விளக்கத்திற்கு அப்பகுதிகளும் இன்றியமையாதனவாதலின் அப்படியே தரப்பட்டிருக்கின்றன.
காவிய அமைப்பு
நாககுமார காவியம் ஐந்து சருக்கங்களையும் 170 பாடல்களையும் கொண்டுள்ளது. காப்புச் செய்யுள் நூலிற்குப் புறம்பாய் முதற்கண் அமைந்துள்ளது. இச்சருக்கங்களை ஒவ்வொன்றிலும் அடங்கிய பாக்களின் அளவு குறித்துக்கூறும் இரண்டு பாடல்கள் நூலிறுதியில் காணப்படுகின்றன.
இவை இந்நூலைக் கற்ற ஒருவர் பின்னாளில் செய்தனவாயிருத்தல் வேண்டும். இப் பாடல்களில் காணுமாறே நாககுமார காவியத்தின் பாடற்றொகையும் அமைந்துள்ளது.
சருக்கங்கள் முதல், இரண்டு என எண்ணுப் பெயரால் குறிக்கப் படுகின்றனவேயன்றி அவற்றிற்குத் தனிப் பெயர் தரப்படவில்லை. வடமொழியிலுள்ள நாககுமார காவியமும் இவ்வாறேதான் உள்ளது. இது சிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் முதலிய காவியங்களைப் போல விருத்தயாப்பில் அமைந்துள்ளது. தமிழில் விருத்த காவியங்களே மிகுதியாயுள்ளன. ‘திருத்தக்க மாமுனி சிந்தாமணியும்