Primary tabs
அணிந்துரை
[ பெருமழைப்புலவர் திரு. பொ. வே.
சோமசுந்தரனார்]
தோலாமொழித்தேவர் என்னும் நல்லிசைப்புலவரால் இயற்றப்பட்டது. கடைச்சங்க
காலத்திற்குப் பின்னரும் தேவாரக் காலத்திற்கு முன்னரும் நிகழ்ந்த காலத்தில் நம்
தமிழகத்தின்கண் ஆருகத சமயம் என்னும் சமண சமயம் யாண்டும் பரவி மிகவும்
செழிப்புற்றிருந்தது. புதுமையான இச்சமயம் அக்காலத்தே தமிழ்நாட்டில் திகழ்ந்த அறிஞர்
பெருமக்களையும் அரசர் முதலியோரையும் பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்தது.
அக்காலத்தே அம் மதச்சார்புடைய நல்லிசைப் புலவர் பலர் அம் மதத்திற்கு ஆக்கமாக
இயற்றிய பெருங்காப்பியங்கள் பல. அவர்கள் மொழிக்கு ஆக்கமாக இயற்றிய
இலக்கணநூல்களும் நிகண்டுகளும் பலவாம். இங்ஙனமாக அக்காலத்தே சமணராகிய
அப்புலவர் பெருமக்கள் தமிழ்மொழிக்குச் செய்த தொண்டுகள் சாலப் பலவாம்.
இத்தொண்டுகளின் வாயிலாய் அப்புலவர் பெருமக்கள் தமிழகத்தின்கண் தமக்கெனச் சிறந்த
தனிப்பெரும் புகழை நிலைநிறுத்திக்கொண்டனர் என்பது மிகையன்று.
சிந்தாமணியும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
வளையாபதியும் குண்டலகேசியும்
ஆகிய இவ்வைந்தும் ஐம்பெருங்காப்பியங்கள் எனப்
பண்டைக்காலத்தே யாரோ ஒருவரால்
கூறப்பட்டுப் பின்னர் அவ்வழக்குத்
தமிழகத்தின்கண் பரவி
வழங்கப்படுவதாயிற்று.
உண்மையில் நோக்குமிடத்துக் காவியங்கள் பல
உளவாகவும் அவற்றினுள்
ஐந்துகாவியங்களை மட்டும் இங்ஙனம் தொகுத்துக்
கூறுதற்குக் காரணங் காண்டல்
அரிதாகின்றது.
மேற்கூறப்பட்ட ஐந்துகாவியங்களையும்
ஐம்பெருங்காப்பியங்கள் என்று வழங்குதல்
கண்ட பிற்காலத்தில் ஒருசாரார் இவை
ஐம்பெருங்காப்பியம் எனவே ஐஞ்சிறு
காப்பியங்களும் உளவாதல்வேண்டும் என்றுகருதிச்
சூளாமணி, யசோதர காவியம், உதயண
காவியம், நாககுமார காவியம், நீலகேசி என்னும்
இவ்வைந்தனையும் ஒருசேரத் தொகுத்து
இவைகளே ஐஞ்சிறுகாப்பியங்கள் என்று
கூறிவைத்தனர்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.