Primary tabs
பஞ்சிக் கனுங்குஞ் சிலம்பாரடிப் பாவை பூவார்
வஞ்சிக் கொடிபோல் பவள்காரண மாக வந்த
செஞ்சொற் புராணத் துரையின்வழிச் சேறு மன்றே"
(பாயிரம் 6)
சிறப்பிக்கப்பட்ட புராணம் அருகக் கடவுளால் அருளிச் செய்யப்பட்ட மகாபுராணம் என்க.
செஞ்சொற் புராணம் என்றது மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ள சீபுராணம்
என்பாருமுளர். அப்புராணத்தின்கண் பதினோராம் தீர்த்தங்கரராகிய சீசிரேயாமிச சுவாமி
புராணத்தின்கண் இக்கதை கூறப்பட்டுளது.
இச்சூளாமணி தோன்றிய காலத்தை வரையறுத்துக்
கூறும் வரலாற்றுச் சான்றுகள்
கிடைக்கவில்லை. ஒருசாரார் இந்நூல் ஒன்பதாம்
நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய
நூலாகும் என்று கருதுகின்றனர். இதுபற்றி எழுந்த
ஆராய்ச்சிகள் பல உளவேனும் இந்நூல்
தோன்றிய காலத்தை அவற்றுள் ஒன்றேனும்
சான்றுகளோடே வரையறுத்துக் கூறவில்லை.
இவ்வாராய்ச்சி எங்ஙனமிருப்பினும் இந்நூல் சமண
சமயத்தினரின் பொற்காலமாய்த் திகழ்ந்த கடைச்சங்க
காலத்திற்குப் பின்னரும் தேவாரக் காலத்திற்கு
முன்னரும் நிகழ்ந்த
காலத்தே தோன்றியநூல் என்றும், அக்காலத்தே
தோன்றிய நூலுள்ளும் சிந்தாமணிக்குப்
பின்னர்த் தோன்றிய நூல் என்றும் ஒருவாறு
ஊகிக்கலாம்.
திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தோன்றிச்
சமண சமயத்தைப் பெரும்பாலும்
அழித்தொழித்தனர் என்பதும் அவர்கள் காலத்தில்
பண்டு சமண சமயத்தைச் சார்ந்த
மன்னர்கள் பலர் அச்சமயத்தை வெறுத்து அதனைத்
தாமே அழிக்கத் தலைப்பட்டனர்
என்பதும் வரலாறறிந்த உண்மைகளாகும். இங்ஙனம்
அழிவெய்தி ஒடுங்கியிருந்த
சமணசமயத்தினர் அத்தகைய இன்னாக் காலத்தே இத்தகைய
சிறந்த நூல்களை
இயற்றியிருத்தல் கூடும் என்பது அறிவொடு
பொருந்தாத கூற்றேயாகும் என்பதில்
ஐயமில்லை. எனவே இந்நூல் மன்னர்களும்
புலவர்களும் தன்னைத் தழுவும்படி
சமணசமயம் தழைத்திருந்த காலத்திற்
றோன்றியிருத்தல் வேண்டும் என்பதே
பொருத்தமாகத் தோன்றுகின்றது.