இந்நூலிற்கு அமைந்த சூளாமணி என்னும் இப்பெயர்
ஆசிரியரால் இந்நூலுக்கிட்ட பெயராகத்தோன்றவில்லை.
அவர் பாயிரத்தின்கண் 'செங்கண் நெடியான் சரிதம்
இது செப்பலுற்றேன்' என்னுமளவே கூறிப்போந்தனர்.
சூளாமணி என்பது தன்மையால் வந்த பெயர் என
மயிலைநாதர் கூறுகின்றனர். சிந்தாமணி, நன்னூல்
முதலியன அங்ஙனம் தன்மையாற் பெயர் பெற்ற
நூல்களென்று அவர் கூறுகிறார். இந்நூலின்கண்
இவ்வாசிரியர் இரத்தினபல்லவ நகரத்தை
வருணிக்குங்கால் அந்நகரம், "ஓங்கிய சூளாமணியின்
ஒளிர்வது" (மந்திரசா. 45) என்றும், மற்றோரிடத்தே
"அருஞ்சயன் என்னும் அரசனை மலைக்கோர் சூளாமணி"
(மந்திர. 91) எனவும், மற்றோரிடத்தே "முடிமேல்
சூளாமணி முளைத்தசோதி" (அரசியல். 389) எனவும்,
மற்றோரிடத்தே இக்காப்பியத்தலைவனாகிய பயாபதி
மன்னனை "உலகின் முடிக்கு ஓர் சூளாமணியானான்"
(முத்தி. 59) எனவுங் கூறியுள்ளார் - இங்ஙனம்
இந்நூலின்கண் நான்கிடங்களிலே சூளாமணி
பேசப்பட்டிருத்தலின் இந்நூல் 'சூளாமணி'
எனப்பட்டது என்று கூறுவாரு முளர்.
பழைய தமிழ்க்காப்பியங்கள் பலவும் அணிகலன்களின்
பெயரே பெற்றிருத்தல்போல இந்நூலும் அணிகலன்களுள்
சிறந்த தலையணிகலனாகிய சூளாமணியின் பெயரைப்
பெற்றிருத்தல் வியப்பில்லை. சூளாமணி என்பது
முடிமணி என்னும் பொருளுடையதாம். ஒரு புலவர்
காலணியாகிய சிலம்பினைச் செய்து தமிழன்னையின்
திருவடிகளில் அணிந்தனர். மற்றொரு புலவர்
மணிமேகலை செய்து அவளிடையில் பூட்டினர்.
மற்றொருவர் சிந்தாமணியினை அவள் நெஞ்சிற்
பதித்தார். வளையும் குண்டலமும் செய்தணிந்த
புலவரும் உளர். தோலாமொழித் தேவரோ
நந்தமிழன்னையின் திருமுடிக்கு அணியாக
இச்சூளாமணியைச் செய்து சூட்டிமகிழ்ந்தனர் என்க.