இச்சூளாமணி வித்தியாதரருலகத்தையும்
நிலவுலகத்தையும் ஒன்றாக இணைப்பதனைக் காணலாம்.
இக்காவியத் தலைவன் இந்நிலவுலகத்து மன்னன் மகனாக,
காவியத் தலைவியோ வித்தியாதர ருலகத்து வேந்தன்
ஒருவன் மகளாகத் திகழ்கின்றாள். இக்காவியத்தின்கண்
வித்தியாதரருலகம் வியத்தகுமுறையில்
வருணிக்கப்பட்டிருக்கின்றது. வித்தியாதர
ருலகத்திலுள்ள சடிமன்னனின் மகளும் இக்காவியத்
தலைவியுமாகிய சுயம்பிரபை பிறந்த பின்னரே
உலகின்கண் மங்கைமார் பிறப்பும் தொழப்படும்
தன்மையுடைய தாயிற்று என்றும், சுயம்பிரபை தோன்றிய
பின்புதான் நல்லிசைப் புலவர் பேரழகென்பதனைக்
கண்டனர் என்றும் அந் நங்கையின் அழகினை இப்புலவர்
பெருமான் பாராட்டுகின்றார்.
சீவகசிந்தாமணியின்கண் திருத்தக்கதேவர் பின்னர்க்
காமச் சுவையையும் வீரச் சுவையையும் பாடக்
கருதியவர் பயில்வோர் உள்ளத்தில் வெறுங்
காமச்சுவையும் வீரச்சுவையுமே நிரம்பிவிடாமல்
அருகக்கடவுள் அறிவுறுத்த நல்லறங்களை
அறிவுறுத்துவதே இக்காவியத்தின் நோக்கம் என இதனைப்
பயில்வோர் அறிந்துகொள்ள வேண்டும் என்னுங்
கருத்துடையராய் அச்சணந்தி என்னும் ஒரு
நல்லாசிரியனைக் கொண்டு சீவகனுக்குச் சிறந்த
அறங்களைச் செவியறிவுறுத்துதலைக் காண்கின்றோம்.
தோலாமொழித்தேவரும் அத்திருத்தக்க தேவர்
அடிச்சுவடுபற்றி இக்காவியத்திலும் தொடக்கத்திலேயே
சிறந்த சாரணர் இருவரைக் கொணர்ந்து சடிமன்னனுக்கு
அறவுரை கூறும் வாயிலாய்ச் சமண சமயத்திற்குரிய
அறிவுரைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும்
ஓதுவிக்கின்றனர், அவ்வறவுரைகள் ஆற்றவும் இனியன;
கற்போர் உளத்தைக் கவரும் தன்மையுடையன.
எடுத்துக்காட்டாக அவற்றுள் ஒன்றிரண்டை ஈங்குக்
காண்போம்.
"மெய்யறி விலாமை யென்னும்
வித்தினுட் பிறந்து வெய்ய
கையறு வினைகள் கைபோய்க்
கடுந்துயர் விளைத்த போழ்தின்
மையுற வுழந்து வாடும்
வாழுயிர்ப் பிறவி மாலை
நெய்யுற நிழற்றும் வேலோ
யினைத்தென நினைக்க லாமோ"
எனவும்,