Primary tabs
அதுகேட்ட சடிமன்னன் தன் மகளிடத்துக்கொண்டுள்ள அன்பு காரணமாகத் தன் திருவடிகள் நோவ நடந்து அந்நிமித்திகன் இல்லத்தை எய்தினான். அரசன் வரவு கண்ட நிமித்திகன் பெரிதும் மகிழ்ந்து அம்மன்னனுக்குப் பரதசக்கரவர்த்தி முதலாகத் திவிட்டன் ஈறாக உள்ள அரசர் வரலாற்றினை விரித்துக் கூறி அத்திவிட்டனே சுயம்பிரபைக்குக் கணவன் ஆவான் என்றும், அத்திவிட்டன் இன்னும் ஒரு திங்களில் ஒரு சிங்கத்தின் வாயைப் பிளந்துகொன்று தன் வீரத்தினை உலகினுக் குணர்த்துவான். வேந்தே! இந்நிகழ்ச்சியானும் என்கூற்று உண்மை என்பதனை உணர்ந்துகொள்க என்று கூறினான்.
அதுகேட்ட சடிமன்னன் மனமகிழ்ந்து அரண்மனையையடைந்து தன் கோப்பெருந்தேவிக்கு இச்செய்தியைக் கூறிப் பின்னர் அமைச்சர்களை அழைத்து இச்செய்தி பற்றி ஆராய்வானாயினன். அவ்வமைச்சர்கள் 'அங்ஙனமாயின் யாம் இப்பொழுதே திவிட்டன் தந்தையாகிய பயாபதி வேந்தன்பால் ஒரு தூதனைவிடுத்தல் நன்'றென்றனர். மன்னனும் அதற்கியைந்து மருசி என்னும் ஒரு சிறந்த தூதனைப் போதன நகரத்தரசனாகிய பயாபதியின்பாற் செலுத்தினான்.
முன்னரே தூதுவன் வரவினை எதிர்பார்த்திருந்த பயாபதி மன்னனுடைய ஏவலனாகிய துருமகாந்தன் மருசியை மகிழ்ச்சியுடன் வரவேற்று அவனுக்கென அமைத்திருந்த சிலாதலத்தில் இருத்தி முகமன் கூறி மகிழ்வித்தான். மன்னனும் அத்தூதன் வரவினை உணர்ந்து மங்கலப்