Primary tabs
சிறப்புற்று விளங்கும் சீரிய காப்பியங்கள் 'சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, சூளாமணி' முதலியன. இவற்றுள் சிந்தாமணிக்கு நச்சினார்க்கினியாரின் நல்லுரையொன்றுளது. அதனை தழுவிச் சிறந்த விளக்கவுரை யொன்றமைத்துக் கழகத்தார் நல்லமுறையில் இரண்டு பகுதிகளாக வெளியிட்டுள்ளனர்.
இதுபோல் 'சூளாமணிக்கும் சிறந்த விளக்கவுரை ஒன்றெழுதுவித்து வெளியிடவேண்டுமென எண்ணினர். அப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் ஆங்குள்ள ஆசிரியன்மாரின் துணைகொண்டு பல ஏட்டுச் சுவடிகளை உடன்வைத்துக்கொண்டு பாடவேறுபாடுகளைத் தெளியக் கண்டு குறித்துச் செவ்விதாக்கி வைத்துள்ளனர் எனக் கழகத்தார் கேள்விப்பட்டனர். அதன்மேல் அவர்களை அணுகி அதனைப் பெற்றனர்:
பெற்றபின் இதற்குச் சிறந்த பதவுரையும் விளக்கமும் எழுதுவித்து வெளியிட வுன்னினர். அவ்வுரைப் பணியினைத் தக்கார் ஒருவர்பால் ஒப்படைக்கக் கருதினர். கருதிப் பன்னூலாசிரியரும் பெரும்புலவருமாகிய கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் புலவர் பால் நல்கினர். அவர்களும் அப்பணியினை ஏற்றுச் செய்துகொண்டு வரும்போது பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனாரவர்களைக் கழகத்துக்கு அறிமுகப்படுத்தித் தமக்குத் துணையாக்கிக் கொண்டனர்.
சோமசுந்தரனார் அவர்கள், சு. அ. இராமசாமிப் புலவர் எழுதியுள்ள, பதவுரையையும் செம்மைப்படுத்தி விளக்கவுரையையும் எழுதியமைத்தனர். இவ்விருவர்கட்கும் கழகத்தார் நன்றி உரித்தாகுக. இதன்பின் பெருமழைப் புலவர். பொ. வே. சோமசுந்தரனாரவர்கள் கழகத்தொடர்பு கொண்டு பத்துப்பாட்டு, குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, பரிபாடல், பெருங்கதை முதலியவற்றிற்கு விளக்கவுரை கண்டனர். இவர்தம் அரும் பேரிலக்கணப் பயிற்சியும், சங்கநூற்பயிற்சியும் இவ்வுரைகளான் எவரும் எளிதினுணரலாம்.