Primary tabs
Liv
வித்வான்கள் மரபில் வந்த உயர்திரு. நாராயணசாமி முதலியார் அவர்களிடத்தில் காஞ்சிப் புராணமும் சைவ சித்தாந்த சாத்திரங்களும் முறையாகப் பாடங் கேட்டவர்கள். அன்னோர் தமது முன்னைநிலைத் திருமகனாரைக் கொண்டு செய்யுள்களுக்குப் பொழிப்புரை முதலியன எழுதுவித்ததும் மகிழ்ச்சிக் குரியது.
வரன் முறையில் பாடங்கேட்போர் தொகை குன்றி வருதலின் இத்தகைய சம்பிரதாய கிரந்தங்களுக்கு உரை வகுக்கும்போது பின் பின் வருவோர் முன்முன் வந்தோரை விஞ்சுதல் இயல்பே. தழுவக் குழைந்த படலத்தில் விந்தம் ஓங்கி எழுந்தமையைக் குறிக்குமிடத்து ’மால்வரை வீயும் எல்லை விளக்கினைச் செத்திறப்ப வளர்ந்தெழுந்து விசும்பு சென்று நிவந்ததால்’ என்னும் தொடர் வருகின்றது. இதற்கு விளக்கில் விழுந்திறக்கும் விட்டிற் பூச்சியைப்போல் விந்தம் ஓங்கி எழுந்தது என முன் உரைகாரர்கள் உரைத்து வந்தனர். ‘வீயும் விளக்கினைச் செத்து’ என்னும் தொடரில் செத்து என்பது உவம உருபு என்பதை ஸ்ரீமத் ஞானியார் சுவாமிகள் அணுக்கமாக இருந்த புலவர்களுக்கு விளக்கி வந்தார்கள். அதனால்தான் அத்தொடர்க்கு ‘அவியும் போது திரிபடர்ந்து எரியும் விளக்குப்போல’ என்னும் உண்மைப் பொருள் பின்பதிப்பில் வெளிவருவதாயிற்று. அதுபோலப் பதிகம் இரண்டாம் பாட்டில், ‘கன்னியாழ்க் கிழவன் வரம்பெறுகாரைக் காட்டினில்’ என்னும் தொடரின் பொருள் யூகமாக எழுதப்பட்டு வந்தது. கன்னியாழ்க் கிழவன் என்பது கன்னி ராசிக்கும் மிதுன ராசிக்கும் உரிய புதன் என்னும் கருத்தில் வந்துள்ளது என்பதை எடுத்துரைத்தவர் பெருநகர் வித்துவான். தில்லை முதலியார் அவர்கள் ஆவார்கள். அம்மெய்யுரை இப்பதிப்பின்கண் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றைப்போல் அறிஞர்கள் தாம்தாம் ஆராய்ந்து காணும் நுண்பொருள்களைத் திரட்டுதல் நம்மனோர் கடன்.
இப்புராணம் வேத மந்திரங்களின் உண்மைப் பொருள்களை ஆங்காங்கு விளக்கிச் செல்வதாக இருத்தலின் ஆதீனங்களில் தக்க வடமொழிப் புலவர்களும் செந்தமிழ்ப் புலவர்களும் சைவசித்தாந்த சாத்திரம் உணர்ந்தோறும் ஆகிய புலவர் குழுவினைத் தக்க ஊதியம் கொடுத்து நிரந்தரமாக ஏற்படுத்திப் பதிப்பிக்க வேண்டியதொன்று. ஆயினும், அவர்கள் செய்யவேண்டிய வேலையைக் காஞ்சிமா நகரத்தைச் சார்ந்த ஒருவர் தமது ஆர்வமே காரணமாக எடுத்து முடித்திருப்பது போற்றற்குரியது.
இதனைப் பதிப்பித்தோரும், பொழிப்புரைத்தோரும் பொருளுதவினோரும் வாங்கிப் பயன்பெறுவோரும் தழுவக்குழைந்த பெருமான் திருவருளால் எல்லா நலங்களும் நிரம்பப் பெறுவர் என்பது திண்ணம்.
ஞாலம்நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆலவாயி லுறையும்எம் ஆதியே.
5-8-’63.