தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kanchi Puranam


Lv

சிவமயம்

அணிந்துரை
தருமை யாதீனத் தமிழ்ப் புலவர்
சித்தாந்தக்கலைமணி வித்துவான் திரு. சி. அருணைவடிவேலு
முதலியார்,
தருமபுரம்.

மக்கள் அடையும் உறுதிப் பொருள்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு, என்னும் நான்கனுள், ‘பரம புருடார்த்தம்’ எனப்படும் வீடுபேற்றினைத் தருவது மெய்ந்நெறியே. அம்மெய்ந்நெறியை உணர்த்தும் நூல்கள் பல திறத்தன. அவற்றுள் புராணங்கள் சிறந்தெடுத்துக் கூறப்படும். பழம் பொருள்களைக் கொண்டு விளங்குதலால், புராணங்கள் அப்பெயர் பெற்றன. எனவே, புராணங்களை உணர்வதனாலேயே மெய்ந்நெறியின் தொன்னிலையை நாம் உணர்தல் கூடும் என்பது பெறப்படும். இச்சிறப்புக் கருதியே புராணங்களை, “சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும்’’ என்றார் அருணந்தி தேவ நாயனார். மாணிக்க வாசகரும் திருவாசகத்தின் முதற்றிருட்பாட்டினை, ‘சிவபுராணம்’ எனக் குறித்தருளினமை கருதற்பாலது.

இன்ன சிறப்புடையனவாய், ‘பதினெட்டு’ என்னும் தொகையினைப் பெற்று விளங்கும் புராணங்களின் பகுதிகள், இஞ்ஞான்று பல தல புராணங்களாய் விளங்குகின்றன. எண்ணிறந்த தல புராணங்களுள் சிறப்புடைய தல புராணங்கள் சில. அவற்றுள்ளும் இன்றியமையாது குறிப்பிடத் தக்க தல புராணங்கள் மிகச் சிலவே. அம் மிகச் சிலவற்றுள்ளும் சிறப்பு வாய்ந்த தலபுராணம் காஞ்சிப் புராணம்.

ஒருவகையில், ‘ஆரூர், தில்லை, காசி’ முதலிய தலங்களே தலங்களுட் சிறந்தனவாகக் குறிக்கப்படினும், மற்றொரு வகையில் காஞ்சியே சிறந்தது என்பது ஆன்றோர் அனைவர்க்கும் உடன்பாடு. அஃதாவது, எழுந்தருளியிருக்கும் இறைவனது அருள்நிலை பற்றிப் பிற தலங்கள் உயர்ந்தன வாயினும், அவனை அடைவிக்கும் நிலைபற்றிக் காஞ்சி சிறப்புடையது என்பதாம்.

உலகம் உய்தற் பொருட்டு, இறைவி திருக்கைலையினின்றும் போந்து, எண்ணான்கு அறங்களை வளர்த்து, இறைவனை என்றும் ஏத்தி வழிபட்டுக் கொண்டிருக்கும் பெருமை காஞ்சி ஒன்றிற்கே உண்டு. அதனாலேயே உருத்திரர் பலரும் அயன் மாலாதி அளவற்ற தேவர்களும், அகத்தியர் மார்க்கண்டேயர் முதலிய பற்பல முனிவர்களும், யோகாசாரியர்களும், பிறரும் காஞ்சியை அடைந்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றனர். அவர்களால் வழிபடப்பட்ட தலங்கள் பலவும் காஞ்சியில் நிரம்பியுள்ளன. இத்துணைத் தலங்களை உள்ளடக்கிய பெருந்தலம் காஞ்சியைத் தவிர மற்றொன்று இல்லை என்பது உலகம் அறிந்து மகிழும் உண்மை. காஞ்சித் தலம் இத்தகு சிறப்புடையது ஆதலின், அதன் புராணமும், அத்தகைய சிறப்புடையதாய் விளங்குதல் இயல்பே.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 13:11:54(இந்திய நேரம்)