Primary tabs
பொன்போற் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
என்பொன் மணியினை எய்தஒண் ணாதே"
என்று விளக்குகின்றார் திருமூலர்.
இத்தகைய இறையன்பாகிய பத்தியைப் பெருக்குவதில் ஈடும் எடுப்பும் இல்லாதது, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம். "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்னும் பழமொழியே திருவாசகத்தின் பத்திச் சிறப்பைத் தெளிவுற விளக்கும். "திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின் கருங்கல் மனமும் கரைந்துருகும்" என்கின்றார் சிவப்பிரகாச அடிகள். திருமுறைகளில் திருவாசகத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.
இத்திருவாசகத்துக்கு உரை கண்டவர் பலர். அவ்வுரைகளுள் தத்துவக் கருத்தும், யோக நூல் பொருளுமாக அமைந்த உரைகளும் உள்ளன. நமது ஆதீன எட்டாந்திருமுறை வெளியீட்டில் இதற்குக் குறிப்புரை அமைந்தது, எனினும் "திருவாசகத்தின் பொருளை யாவரும் எளிதில் விளங்கிக்கொள்ள வேண்டும்" என்னும் கருத்தினால் நம் அன்பர் திருக்குறள்வேள் - திரு.ஜி.வரதராசப் பிள்ளையவர்கள் திருவாசக எளிமை உரை ஒன்றைத் தாமே எழுதி, அச்சேற்றி வெளியிடுவதை அறிந்து மகிழ்ச்சியுறுகின்றோம்.
திரு. பிள்ளையவர்கள் குருவருளை நிரம்பப் பெற்றவர்கள். எங்கள் ஆதிபரமாசாரியார் ஸ்ரீ குருஞானசம்பந்தரது அருட்டிரு நோக்கமே இவரைப் பல்லாண்டுகட்கு முன்பே திருக்குறள்வேள் ஆக்கியது. அதற்குக் காரணமாய் இருந்தது இவரது திருக்குறள் விளக்க உரையே. திருக்குறளுக்கு விளக்கவுரை கண்ட இவர், இது பொழுது திருவாசகத்திற்கு எளிய உரை கண்டு வெளியிடுகின்றார். எட்டாந்திருமுறை யாகிய திருவாசகம், சிவஞானபோத எட்டாம் சூத்திரத்தில் சொல்லப்பட்ட குருவருளின் விளக்கமாக அமைந்தது. அதற்குக் குருவருள் பெற்றுச் சிவபூஜா துரந்தரராய் விளங்குகின்ற நம் ஆதினப் பேரன்பர் திரு. பிள்ளையவர்கள் தெளிவுரை ஒன்றை