Primary tabs
கட்டளைக் கலித்துறை
போதவித் தேபுக லேயற வோர்க்குநம் புந்தகையார்
தீதவித் தேற்குநற் செவ்விய னேபுலத் தெவ்வடர
வேதவித் தேமிக வேசறு வேற்கு விரைந்தருணீங்
காதவித் தேன்சுர ருண்கச்சி வாழன்பர்க் கண்ணியனே. (61)
(இ-ள்.) போத வித்தே - ஞானப் பயிர் தழைவிக்கும் விதையே, அறவோர்க்கு புகலே - அறநெறியில் நிற்போர்க்குச் சரணே (அடைக்கலப் பொருளே), நம்புந் தகையார் - நின்னை விரும்பும் தகுதி உடையாரது, தீது அவித்து - தீமையை ஒழித்து, ஏற்கும் - அவர்களை ஏற்றுக்கொள்ளும், நற் செவ்வியனே - மிக்க செம்மை நலம் வாய்ந்தவனே!,வேத வித்தே - வேதத்திற்கு மூலகாரணனே!, புலத்தெவ் - ஐம்புலன்களாகிய பகைவர், அடர - என்னோடு போர் செய்தலால், மிக வேசறு வேற்கு - மிக்க அயர்ச்சியால் மயர்வு மிக்கு, நின்னை யடைந்த எனக்கு, விரைந்து அருள் - விரைந்தருள்வாய், நீங்காது - நீங்காமல், அவி தேன் - வேள்வி யுணவாந் தேனைக் கொண்டு, சுரர் உண் - உம்பர்களை உண்பிக்கின்ற, கச்சி வாழ் - காஞ்சியில் வாழ்கின்ற அன்பர்க்கு, அண்ணியனே - அன்பருக்கு நெருங்கி அருள் செய்பவனே!்
அன்பர்க்கு அண்ணியனே அருள் என இயையும்.
‘அன்பர் கண்ணியனே’ என்று பிரித்து, ‘அன்பரைப் பெருமைப்படுத்துபவனே’ என்று பொருள் கூறினும் அமையும். இப்பொருள் கொள்ளுங்கால் மோனை இன்பம் ஆய பயனுள்ளது. வேசறல் - இளைப்புற்றுத் தாழ்ந்திருத்தல். (திருவா. கோயில் மூத்த திருப்பதிகம், 5 பார்க்க.) அடர்தல் - போர் செய்தல்.
‘எண்ணுறு படைகளிவ்வா றெதிர்தழீஇ யடரும் வேலை’ (கந்தபுரா. தாரக. 39)
அவி தேன் சுரர் உண் கச்சி வாழன்பர் - அவிசாகிய தேன் கொண்டு தேவர்களை உண்பிக்கின்ற கச்சிப்பதியில் வாழும் அன்பர், உண் அன்பர் என இயைந்து பிறவினைப் பொருள்படும் வினைத்தொகையாம்.
‘தெவ்வுப் பகையாகும்’ - தொல். உரியியல். ஈண்டுத் தெவ்வென்னுஞ் சொல் பண்பாகு பெயராய்ப் பகைவர்களை உணர்த்திநின்றது.
‘நம்பும் மேவும் நசையா கும்மே’ - தொல்காப்பியம். உரி. எனவே, ஈண்டு நம்பும் தகையார் என்பதற்கு, விரும்பும் தகுதியுடையார் என்று பொருள் கூறப்பட்டது.
போத வித்தே! புகலே! செவ்வியனே! வேத வித்தே! நீங்காது அவித்தேனை சுரர் உண் கச்சிவாழ் அன்பர்க்கு அண்ணியனே விரைந்தருள் என முடிக்க.