தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kachchik Kalambagam-பச்சைநி - 71




கலிநிலைத்துறை

பச்சைநி றப்பைந் தொடிவல மேவிய பசுபதியுள்
நச்சின ரொன்றினும் எச்சமு றாதருள் நனிகூர்வான்
கச்சியு றைந்தருள் கண்ணுதன் மறலிக் கண்டகனால்
அச்சமு றாதடி யவர்முனம் அந்தத் தணுகுவனே.             (71)

(இ - ள்.) பச்சை நிறம் பைந் தொடி - பசிய நிறத்தையுடைய பார்வதி, வலம் மேவிய - தன் இடப்பக்கத்தே விரும்பியுறையத் தான் அவள் வலப்பக்கத்தே விரும்பி யுறைதலைப் பொருந்திய, பசுபதி - உயிர்களுக்குத் தலைவன், உள் நச்சினர் - தன்னை மனத்தில் எழுந்தருள வேண்டும் என விரும்பி வழிபாடு செய்தவர், ஒன்றினும் - அவ்விருப்பத்தில் சிறிதும், எச்ச முறாது-குறைவு அடையாது, நனி அருள் கூர்வான் - அவருள்ளத்தே எழுந்தருளிச் சாலவும் அருள் செய்பவனாய், கச்சியு றைந்தருள் கண்ணுதல் - காஞ்சியில் எழுந்தருளும் நெற்றிக் கண்ணனாகிய ஏகாம்பரநாதன் ஆவான், மறலிக் கண்டகன் - அவன் எமனுக்கும் எமனாவன், ஆல் - ஆகையால், அச்சம் உறாது - அச்சம் உறாது - அச்சம் அடையாதபடி, அடியவர் முனம் - அடியவரிடத்து, அந்தத்து - (எமன் உயிரைப் பற்ற) இறக்கும் நேரத்தில், அணுகுவன் - அடைந்து அவ் வெமனிடமிருந்து அவரை விடுவித்துத் தன்பால் சேர்த்துக்கொள்ளுவான்.

இனி, அருள் மிகுதியும் செய்யும் பொருட்டுக் கச்சியுள் உறையும் நெற்றிக்கண்ணன் எனினும் பொருந்தும்.

பைந்தொடி - பசும் பொன்னாலாகிய வளையலணிந்த பார்வதி (பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.)

மேவுதல் - விரும்பி யுறைதல். ‘நம்பும் மேவும் நசையாகும்மே’ என்பது தொல்காப்பியம்.

பார்வதி இடப்பாகத்தை விரும்ப அங்ஙனமே தந்த இறைவன், தன்னை நச்சினர் உள்ளெழுந் தருளவேண்டின் அங்ஙனமே எழுந்தருளிக் காப்பான்.  அவன் உள்ளிருக்குங்கால், எமன்வரின், அவன் காலகாலனாதலால் அவனிடமிருந்து காத்துத் தன்னடிகளில் சேர்த்துக்கொள்ளுவான் என்க.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-10-2019 16:23:49(இந்திய நேரம்)