தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU-Library

தஞ்சைவாணன் கோவை
6
கிளவிக் கொத்துகளையும்,  அவைகளின்உட்பிரிவான  பலதுறை விளக்கங்களையும்
விளக்கிக் கூறுகின்றது. அத் துறைகளுக்கேற்ற இலக்கியமாக  இக்கோவை படர்ந்து
மிளிர்கின்றது.

பொதுவாக  நோக்குமிடத்துக்  கோவைகள் 1‘உருவும்  திருவும்   பருவமும்
குலனும்  குணனும்  அன்பும்   முதலியவற்றால்   தம்முள்   ஒப்புமையுடையராய
தலைமகனும் தலைமகளும் பிறர் கொடுப்பவும் அடுப்பவும் அன்றிப் பால்வகையால்
தாமே எதிர்ப்பட்டு‘க்  களவிற்  புணர்ந்து இன்பந்  துய்த்துப் பின்  கற்புநிலையின்
இற்கிழமை  பூண்டு விருந்து புறந்தந்து அருந்தவர்ப் பேணி ஒழுகி வரும்  இல்லற
இயற்கை  நுட்பத்தைப்  புனைந்துரை  வகையால்  எடுத்துரைத்து  ஒரு  கோவை
(தொடர்பு) ஆக்கி,    கற்றோர்க்கும்     கேட்டோர்க்கும்    இன்பம்   பயக்கும்
துள்ளலோசையான்  அமைந்த  கட்டளைக்   கலித்துறைப்   பாக்களால்   பாடப்
பெறுவதாகும்.

இம் முறையில் அமைந்து விளங்குவன: திருக்கோவையார், பாண்டிக்கோவை,
அம்பிகாபதி கோவை,  திருவெங்கைக் கோவை,  கோடீச்சுரக் கோவை   முதலிய
பலவுமாம்.  இவைகள் கடவுளரையோ அரசர்களையோ குறுநில  மன்னர்களையோ
வள்ளல்களையோ  பாட்டுடைத் தலைவராக் கொண்டு  அத்தலைவர்களின் ஆட்சி
முறைக்குட்பட்ட  நாட்டில்  இக் காதலர்  நிகழ்ச்சி  நிகழ்வதாகத்  துறைகொண்டு
அமைந்து செல்லும்.  இவற்றுள் திருக் கோவையாரும் திருவெங்கைக்  கோவையும்
கோடீச்சுரக்  கோவையும்  தனக்கொப்புமையில்லாத் தலைவனான  இறைவனையே
பாட்டுடைத் தலைவனாகக்  கொண்டு மிளிர்வன.  அம்பிகாபதி கோவை யாரையும்
பாட்டுடைத் தலைவனானக் கொள்ளாது கோவை நிகழ்ச்சியை மட்டும் கூறுகின்றது.
பிற கோவைகள் மக்களுட்  சிறந்த அரசர்களையும்  வள்ளல்களையும்  பிறரையும்
தலைவராகக் கொண்டு நிகழ்வனவாகும்.  இவைகள் போன்றே இத் தஞ்சைவாணன்
கோவையும் வள்ளலான சந்திரவாணன்மேற் பாடப்பெற்றுத் தானே தனக்கொப்பான
தனி நூலாகத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் ஓங்கி மிளிர்கின்றது.

அகப்பொருள்  துறையில்   முதலாவது  கைக்கிளை  நிகழ்வது   இயற்கை.
2‘கைக்கிளையாவது: ஒருமருங்கு  பற்றிய  கேண்மை‘ என்பர்,  நச்சினார்க்கினியர்.
ஒருமருங்கு  பற்றிய  கேண்மையாவது,  தலைவனோ தலைவியோ ஒருவர்  காதல்
கொள்ளாமல்  இருப்ப,  (இருவரும் ஒன்றுபட்டுக்   காதல் கொள்ளாமல்)  ஒருவர்
மட்டும் காதல் கொள்வது. அஃதாவது,


1. திருக்குறள், காமத்துப்பால், அதி. (106) பரிமேலழகர் விளக்கவுரை.
  2. தொல். அகத்திணை இயல், சூத்திரம் - 1. நச். உரை விளக்கம்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 16:14:58(இந்திய நேரம்)