தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

-


xxiii

"ஆறு விழியிலுறு மாறுபொறி நீர்க்கரையில்
 ஆறுமக வாயொன்றா யன்னைசத்தி வீறுகொடு
 ஆறுபடை வீடுற் றசுரரறத் தேவர்தொழும்
 ஆறுமுக னம்மையளிப் பான்."

என மனக்கனிவால் மகிழ்ச்சி ததும்பப் புகன்றனர். இளவயதிற் பொருட்
செறிவான கவிகளாய் விரைவிற் கூறும் வன்மையோடு சமயப்பொறுமை
இருத்தலுங் கண்டு சந்தோஷித்தார்கள். பின்னர் இவரது அன்னையை
ஈன்றோர் வசித்துள்ள சேது சமஸ்தானத்தைச் சார்ந்த அநுமந்தக்குடிக்குச்
சென்று ஆருகத சமயநூல் முறையோடு கற்றுப் பின்பு பாண்டிநாடு,
சோழநாடு, தொண்டை நாடுகளிற் சைவ முதலிய மற்றச் சமய நூல்களும்
கருவி நூல்களுஞ் செவ்வனே அறிந்தும் பிறர்க்கு எடுத்துரைத்தும்,
அங்கங்கு உள்ள சமஸ்தானங்களில் பிரசங்க மாரி பொழிந்தும் வந்தனர்.
இடை விடாது பெருமுழக்காகச் சொரியுஞ் சொன்மாரி கவிமாரிகளை
நோக்கிய செய்தமிழ்வல்லார் இவரைக்கார்மேகம் என்றழைத்தனர்.
அதனால் இவருக்குக் கார்மேகக் கவிஞர் எனப் பெயராயிற்று.
இளமைக்காலத்தே கவிசொல்லல், பொருள்கூறல், பிரசங்கித்தலான வன்மை
வாய்ந்து, நாற்றிசையுமுள்ள கல்விமான்களைக் கண்டு பழகி விசயமங்கலம்
வந்துசேர்ந்தனர். அப்பொழுது இவருக்கு வயது இருபது இருக்கலாம்.
பின்னர் மைசூரைச் சார்ந்த கொல்லாபுரத்தில் சாந்தம் என்னும்
கன்னிகையை விவாகஞ் செய்வித்தார்கள். வேட்டகத்தே சிலநாள் வசிக்க
நேர்ந்தது. அப்பால் விஜயமங்கலம் வந்து சேர்ந்தனர். நாம் தோற்றிய
இக்கொங்கு மண்டலத் தேற்றமிகத் தோற்ற ஒரு சிறு நூல் சாற்றவேண்டு
மென்றெண்ணினார். சங்க நூல்களிலும் இதிகாசங்களிலும் காணப்படுவதைக்
குறித்துக் கொண்டார். ஒவ்வொரு நாடுகளுக்குஞ் சென்றார் அங்கங்குள்ள
சமஸ்தானங்களைக் கண்டும், செந்தமிழ்ப் புலவர்களையும் தலவாசிகளையும்
சந்தித்து அளவளாவிப் பழஞ் சரித்திரங்களை வினவி அறிந்தனர். சென்ற
இடங்களில் பிரசங்கங்களால் உவப்பிப்பர். கேட்ட வினாவிற்கேற்ற பொருள்
அமைத்துக் கவி கூறி மகிழ்விப்பர். இவ்வாறு கொங்குமண்டலமெல்லாஞ்
சுற்றிப் பார்த்து நுணிகி ஆராய்ந்து அறிந்த சரிதங்களைத் திரட்டிக் கொங்கு
மண்டல சதகம் என இந்நூலியற்றினர். இதன் உட்பொருள்களை ஆய்ந்தோர்
கொண்டாடினர் என்பர். இதைத்தவிர வேறுநூல்கள் இவர் இயற்றியுள்ளதாக
இதுவரை தெரியவில்லை. அவ்வவ்வமயங்களிற் கூறிய சில செய்யுட்கள்
கிடைத்தன.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-10-2017 13:35:59(இந்திய நேரம்)