தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalingathuparani


'வடகலிங்கர்கோன்    இருமுறையாகத்    திறை     செலுத்தவில்லை’
என்னும்  மொழி  செவிப்பட்ட  உடன்  சூழ்ந்திருந்த   பல   அரசர்களும்
'இனி,   என்ன    விளையுமோ,  என     மனமழியவும்,   குலோத்துங்கன்
முகத்துச்  சினக்குறிப்புத் தோன்றவில்லையாம். அவன் வாய் சிறிதே முறுவல்
விளைத்ததாம்.   இது   சினத்தால்   எழுந்த  முறுவல்  தானோ?  எள்ளல்
காரணமாய்  எழுந்த  முறுவல்  என்றலேதகும். இங்ஙனம் தான் பேரரசனாந்
தன்மைக் கேற்ப ஒழுகிய திறத்தை நயமுற எடுத்துக்காட்டுகின்றார் ஆசிரியர்.

     இனி,  இவனுக்குத்  தேவியர் மூவர் இருந்தனர். அவர்கள் மதுராந்தகி,
தியாகவல்லி,  ஏழிசைவல்லபி  எனப்  பெயர்   பெற்றிருந்தனர்.  பரணியில்
மதுராந்தகி   கூறப்படாததால்   கலிங்கப்   போருக்கு   முன்னே   அவள்
இறந்திருக்க     வேண்டுமென்று      தெரிகிறது.     மதுராந்தகிக்குப்பின,்
 தியாகவல்லி  பட்டத்து  மனைவியாயினள். குலோத்துங்கன் காஞ்சி நோக்கி
அரசர்  சூழக்  களிறூர்ந்து  புறப்பட்டுச்  சென்றபொழுது,  இவளும் அரசர்
தேவியர்  சூழப்  பிடியூர்ந்து  சென்றாளாகக்  குறிக்கப்படுகின்றாள்.

'பொன்னின் மாலைமலர் மாலையணி மாறியுடனே
     புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ்பிடிவரச்
சென்னி ஆணையுடன் ஆணையை நடத்தும் உரிமைத்
     தியாக வல்லிநிறை செல்வி உடன் மல்கி வரவே'

என  ஆசிரியர்  கூறுமாறு காண்க. ஏழிசைவல்லபி தன் பெயருக்கேற்ப
இசையில்  வல்லவளாய்  இருந்தனள். குலோத்துங்கன் காஞ்சி சென்றபொழுது
இவள்  அவனைப்  பிரியாது அவனுடன்  அக்களிற்றின் மீதே உடன் ஊர்ந்து
சென்றனளாக  ஆசிரியர்  குறிக்கின்றார்.

'வாழி சோழகுல சேகரன்வ குத்த இசையின்
     மதுர வாரிஎன லாகும்இசை மாத ரிதெனா
ஏழு பாருலகோ டேழிசைவ ளர்க்க உரியாள்
     யானை மீதுபிரி யாதுடன்இ ருந்து வரவே'

என வருமாறு காண்க.


புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 13:29:16(இந்திய நேரம்)