தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalingathuparani


இவனுக்கு  அமைச்சனும் படைத் தலைவனுமாகத் திகழ்ந்தவன் பல்லவர்
குலத்  தோன்றலும்  வண்டையர்கோனும் தொண்டைமானுமாகிய கருணாகரன்
என்பவன்.

இனி,  இவன்  செய்த  போர்களைக்  காண்போம்:

இவன்,  இளவரசானவுடனே  போர்வேட்டெழுந்து  வடதிசை நோக்கிச்
சென்று  வத்தவ  நாடாகிய  சக்கரக்கோட்டத்தை வயிராகரம் என்ற இடத்தே
பொருது    வெற்றி     கொண்டதே      இவனது     கன்னிப்போராகும்.
சக்கரக்கோட்டம்  என்பது   மத்திய  மாகாணத்தில்  உள்ளது.  அப்பொழுது
தாராவருடன்    என்னும்    அரசன்   அங்கு     அரசாண்டு    வந்தான்.
குலோத்துங்கன்   சக்கரக்கோட்டத்தை    அழித்து    அவனை    வென்றி
கொண்டதோடு, வயிராகரம்  என்னும்  நகரத்தையும்  எரியூட்டி  அழித்தனன்.

'திகிரி புகைஎரிகு விப்ப வயிரா கரமெரிம டுத்து'

எனவும்,

'புருவத், தனுக்கோட்ட நமன்கோட்டம்
     பட்டதுசக் கரக்கோட்டம்'

எனவும் வருமாறு காண்க.

'மாறு பட்டெழு தண்டெழ வத்தவர்
வேறு பட்டதும் இம்முறையே யன்றோ'

என்று பின்னரும் வந்தது.

இனித்  துங்கபத்திரைப்  போர்க்களத்தே   இவன்குந்தள   வரசனான
ஆறாம்  விக்கிரமாதித்தனையும், அவன் தம்பி சயசிங்கனையும் போர் செய்து
வென்று,  அவர்களை மணலூர் வழியாகத் துங்கபத்திரை ஆற்றுக்கு அப்பால்
துரத்தி,   அவர்கள்     தலைநகரமாகிய    கலியாணபுரத்தையும்   தனக்கு
உரிமையாக்கிக்  கொண்டான்.

'துங்க பத்திரைச் செங்க ளத்திடைச்
சோள சேகரன் வாளெ றிந்தபோர்'

     என்றவிடத்து  அப்போர்  குறிக்கப்படுகிறது.


புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 13:34:25(இந்திய நேரம்)