தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalingathuparani


சினங்கொண்டு பகையரசர் மாட்டுப் போர்க்கெழுந்த படை
முதன்முதலாகப் பகையரசனின் ஊரை எரிகொளுவியும், சூறை கொண்டும்
அழித்தலை இயல்பாகக் கொண்டிருந்தது. கலிங்கநாட்டின் மேல்
போர்க்கெழுந்து ஆண்டுப் புகுந்த படை,

'அடையப் படர்எரி கொளுவிப் பதிகளை
அழியச் சூறைகொள் பொழுதத்தே'

எனக் கூறப்படுவது காண்க.

போர்க்களத்தில் இருதிறப் படையும் பொருவுழி நால்வகைப் படையுள்
ஒவ்வொருவகைப் படையும் பெரும்பாலும் அவ்வவ்வகைப் படையுடனேயே
பொரும். அரசர் அரசருடனேயே பொருவர்.

யானைகள் பொருங்கால் துதிக்கையை முறுக்கி நின்று பொரும்
இயல்புடையன. வீரர் சிலர், யானையொடும், யானை வீரரொடும்,
குதிரையொடும், குதிரை வீரரொடும் பொருது நிற்பர்.

உலக்கையும், சக்கரமும் படைக் கருவிகளாகப் போர்க்களங்களில்
வழங்கப்பட்டன. அக் காலத்தில் போர்மேற் பயணஞ் செய்வோர் இரவில்
பயணத்தை ஒழிந்ததோடு, இரவில் போர் செய்தலையும் ஒழிந்திருந்தனர்
என்று தெரிகிறது. கலிங்கப் போர்மேற் சென்ற படை,

'உதயத்து ஏகுந்திசை கண்டு அது
மீள விழும்பொழுது ஏகல் ஒழிந்தது'

எனக் கூறப்படுதலானும், கலிங்கவேந்தன் படைசூழப் பற்றியிருந்த
மலைக்குவட்டை ஞாயிறு மேற்றிசையில் மறைந்த நேரத்தே அணுகிய படை,

'வேலாலும் வில்லாலும் வேலி கோலி
வெற்பதனை விடியளவும் காத்துநின்றே'

எனக் கூறப்படுதலானும் இவை உணரப்படும்

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 13:45:49(இந்திய நேரம்)