Primary tabs
"முந்தவைதால் வைவேன் என்றாய் மருதூர்ப்பள்ளி--சற்றே
மூப்பிளமை பார்த்துத்தலை சாய்ப்பா ரில்லையோ"
என்று கூற, இளையபள்ளி,
"இந்த வார்த்தை முந்தச் சொன்னால் முக்கூடற்பள்ளி சண்டை
இத்தனையுண் டோஎனக்குப் புத்தியில் லையோ"
என்று அமைதி கூற, மூத்தபள்ளி,
"சொன்னா லென்ன நீயும் பொறு
நானும் பொறுத் தேன்--கிளை
சூழ்ந்திருக்க நாமே கூடி
வாழ்ந் திருக்க லாம்
பன்னகத்தி லாடியமுக்
கூடலழகர்--திருப்
பாதமலர் வாழ்த்தி யாடிப் பாடுவோமே"
என்றுகூற இருவரும் அமைதியாகச் சாந்த நிலையடைந்து திருமாலை வாழ்த்தி யாடிப்பாடும் நிலைமைக்கு வருகின்றார்கள். இப் பாடல்களில் படிப்படியாகச் சாந்த நிலையைக் கொண்டு வந்து முடிக்கின்ற அருமையைக் காண்க.
மனம் முதலிய கருவிகளின் ஆர்ப்பாட்டம் ஒடுங்கி அமைதி பெறுகின்ற நிலையிலே, நானென்ற ஆணவம் கரைகின்ற நிலையிலே, தன்னை மறக்கின்ற நிலையிலேதான் உயிர்களுக்கு இன்பந் தோன்றுகின்றது. ஒன்பதுவகை உணர்ச்சிகளும் மக்களின் உணர்வுநிலையை எழுப்பி ஓயச்செய்து தன்னை மறக்கச்செய்து ஒரு பேரின்ப வெள்ளத்தில் மூழ்கச் செய்கின்றன. இத்தகைய இன்பவெள்ளத்தில் திளைக்காதவர்களின் வாழ்வும் ஒரு வாழ்வு என்று சொல்ல முடியுமா? அவர்கள் கற்ற கல்வியெல்லாம் பெற்ற செல்வமெல்லாம் கல்வியென்றும் செல்வமென்றும் போற்றப் பெறுமா? அவைகளெல்லாம் உண்மையான வாழ்வு இருக்கின்றது என்பது ஒருவகை மயக்கம்தான்.
இந்த நூல் முழுதும் கற்கும் இன்பம் தனியின்பம். தேர்வு எழுத அங்கும் இங்கும் விடைக்குக் கருத்துக்கள் தொகுக்கும் அளவில் படிக்கும் படிப்பினால் இன்பம் ஒருநாளும் பெற முடியாது. ஆகவே ஒரு நூலையாவது முற்றுங் கற்றுத் தெளிந்து களிகூர்வதுவே சாலச் சிறந்த கல்வி என்க.