Primary tabs
தாழ்த்தும் பிறவிச் சலதியிற் படியா
தேற்றிடும் பரிசின் இலங்குமாக் கூடல்
போற்றிடும் பெரியோர் புக்குவந் துலவும்
இக்கூ டதனால் எய்தும் மறுத்தவிர்
முக்கூடல் என்னும் மூதூர் மேவும்
எழிலார் கமலத்து என்றாய் உலவும்
செழுமையார் அகலத் திருமால் என்னும்
அழகன் புத்தே ளாக வமைத்து
ஒழுங்காத் தந்த உயர்நகர் வளனும்
பண்ணையார் வளனும் பாய்புனல் வளனும்
எண்ணரும் பொங்கரின் எய்திய வளனும்
இவ்வளம் முதலிய இன்புற உதவும்
செவ்வியார் மள்ளர்கள் தேவியர் பள்ளியர்
குரவை இசைத்துக் கூத்தாட் டயர்ந்து
விரவு மதுக்கள் விழைவொடு மாந்தி
இந்திரத் தெய்வதம் போற்றிஎக் காலும்
சிந்தை யின்பிற் றிகழ்தருந் தகைத்தாய்
உள்ளி ஆன்றோர்கள் உரைக்கும் பிரபந்தம்
பள்ளெனப் பகரல் அப் பரிசினைத் தழீஇத்
திருமுக்கூடற் பள்ளியாந் தெரிவையும்
மருதூர்ப் பள்ளி என்னும் மங்கையும்
அந்நகர்ப் பள்ளனுக் கின்னலந் தரூஉம்
பொன்மனை யாகப் பொருத்திமுக் கூடற்
பள்ளென் றொருநூல் பாரெல்லாம் மகிழ்கூர்
ஒள்ளிய விம்மிதம் உரைநலம் அணியார்
கற்பனை யடுக்குக் கட்டுரை மோனை
அற்புத எதுகை அமைத்திடும் பாங்கினுள்
இந்நிலப் புலவர்கள் இதயந் தோன்றா
உந்நதஞ் சிலஅவற் றுண்டவை என்னெனிற்
கறைபட் டுள்ளது கப்பத்து வேழம்
திரிபட் டுள்ளது நெய்ப்படு தீபந்
தனியே நின்றது தாபதர் உள்ளம்
இனிதினிற் கலங்கிய திலகுவெண் டயிர்க்கண்
மாயக் கண்டது நாழிகை வாரம்