தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pillaitamil Urai Pagudhi-பிள்ளைத்தமிழ்

பிள்ளைத்தமிழ்

பிள்ளைத்தமிழ் என்பது தமிழ்மொழியிலுள்ள தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகவுள்ளது.இது தாம் வழிபடும் தெய்வங்களையேனும், பெரியார்கள்மன்னர்கள் வள்ளல்கள் முதலியோருள்ஒருவரையேனும் பிள்ளையாகப் பாவித்துத் தம் அன்புடைமைதோன்றப் பத்துப் பருவங்களமைத்து நூறு, ஆசிரியவிருத்தத்தால் பாராட்டிப் பாடப்படுவதாகும்.இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற்பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். ஒவ்வொன்றும்பத்துப் பத்துப் பருவங்களுடையன. முதல் ஏழுபருவங்கள் இருபாற் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவாம். ஆண்பாற் பிள்ளைத்தமிழாயின்இறுதி மூன்று பருவங்கள் சிற்றிற் பருவம், சிறுபறைப்பருவம், சிறுதேர்ப் பருவமாக அமையும். பெண்பாற்பிள்ளைத் தமிழாயின் இறுதி மூன்று பருவங்கள்அம்மானை, நீராடல், ஊசற் பருவங்களாய் அமையும்.

பருவ விளக்கம்

(1) காப்புப் பருவம் : பிள்ளைத்தமிழ் பாடும் இடத்து இரண்டாம் திங்களிற் பிள்ளையைக் காக்க என்று காத்தற் கடவுள் முதலிய தேவர்களை வணங்கி வேண்டுவது.

(2) செங்கீரைப் பருவம் : ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி இரு கைகளையும் நிலத்தில் ஊன்றித் தலைநிமிர்ந்து முகம் அசைய ஆடுதல். இஃது ஐந்தாம் திங்களில் நிகழும்.

(3) தாலப் பருவம் : தாலாட்டைக் கவனிக்கும் பருவம். தாலாட்டு-ஒருவகை நாவசைப்பு. தாலாட்டையேல் தாலாட்டையேல் என்னும் அடுக்கு, தாலோ, தாலேலோ, என இணைந்தும் தால் எனத் தனித்தும் மரீஇயிற்று. ஏழாந்திங்களில் நிகழ்வது. எட்டாந் திங்களில் நிகழும் என்றும் கூறுவர்.

(4) சப்பாணிப் பருவம் : இருகை யொருங்கு சேர்த்துக் கொட்டும் பருவம். இஃது ஒன்பதாந் திங்களில் நிகழ்வது.

(5) முத்தப் பருவம் : குழந்தை முத்தம் தருமாறு தாய் தந்தை முதலியோர் வேண்டுதல். இது பதினொன்றாந் திங்களில் நிகழ்வது.

(6) வருகைப் பருவம் : சிறுநடை யெய்தும் பருவம். இது பதின்மூன்றாந் திங்களில் நிகழ்வது. பன்னிரண்டாம் திங்கள் எனவும் கூறுவர்.

(7) அம்புலிப் பருவம் : வானத்திலுள்ள நிலவைக் குழந்தையுடன் விளையாடுதற்குச் செவிலித் தாயார் முதலியோர் அழைக்கின்ற பருவம். பதினைந்தாந் திங்களில் நிகழ்வது. பதினெட்டாந் திங்களில் நிகழ்வது எனவும் கூறுவர்.

(8) அம்மானைப் பருவம் : பிள்ளையை நோக்கி மாதர்கள் முத்தம்மானை முதலிய அம்மானையை யெடுத்தாடியருள வேண்டுமெனக் கூறும் பருவம்.

(9) நீராடற் பருவம் : பிள்ளையை நோக்கி மகளிர்கள் ஆற்று வெள்ள நீராட வேண்டிக் கூறும் பருவம்.

(10) ஊசற் பருவம் : குழந்தையை ஊஞ்சலிலேற்றி மகளிர் அவ் வூஞ்சலை செய்கின்ற பருவம். இறுதியில் உள்ள மூன்று விளையாடல்களும் ஐந்து ஆண்டு முதல் ஒன்பது ஆண்டு வரை நிகழுஞ் செயல்களாகக் கூறப்படும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 01:17:22(இந்திய நேரம்)