Primary tabs
முதல் திருமுறை
முதல் தொகுதி
நூல் அறிமுகம்
பேராசிரியர் க. வெள்ளை வாரணனார்
தமிழகம் உலகம் போற்றும் முறையில் பலதுறைக் கல்விகளிலும் சிறந்து விளங்குதல் வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்துடன் செட்டி நாட்டரசர் பெருங் கொடைவள்ளல் டாக்டர் ராஜாசர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் இற்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன் நிறுவப்பெற்றது அண்ணாமலைப்பல்கலைக்கழகமாகும், தமிழ்நாட்டின் நெஞ்சத் தாமரையாகத் திகழும் சிதம்பரத்தின் எல்லையிலே அமைந்த கலைக்கோயிலாகிய இப்பல்கலைக்கழகம், பொதுவாகப் பாரத நாட்டிற்கும் சிறப்பாகத் தமிழ்நாட்டிற்கும் ஆக்கந்தரும் நிலையில் அறிவியல், பொறியியல், வேளாண்மை, கலைத்துறை, இந்தியமொழியியல், வணிகவியல், சட்டவியல், மெய்ப்பொருளியல் முதலிய பல்வேறு கல்வித்துறைகளையும் தனக்கு அங்கமாகக்கொண்டு பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கி உலகிற்கு வழங்கி வருகின்றது. தமிழ் நாட்டின் கண்ணெனப் போற்றப் பெறும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பொதுவாகப் பல துறைக்கல்வி வளர்ச்சிக்கும் சிறப்பாகத் தமிழ்மொழி, தமிழிசை, தமிழர் பண்பாடு ஆகிய துறைகளின் வளர்ச்சிக்கும் நிலைக்களமாக அமைந்து கல்விப்பயிரை வளர்த்து வருவதனை அறிஞர் பலரும் நன்கு உணர்வர்.
பொன்விழாக் கொண்டாடும் பொலிவினைப் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தன் பொன்விழாவின் அங்கமாக அருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் அருளிய திருவருட்பாவை உரையுடன் வெளியிடும் செந்தமிழ்ப்பணியினைத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு செய்த
தவப்பயனாக இற்றைக்கு நூற்றைம்பத்தாறு ஆண்டுகளுக்கு
முன்னே தென்னார்க்காடு மாவட்டம்
சிதம்பரத்தையடுத்துள்ள மருதூரில் கருணீகமரபில்
இராமையா பிள்ளைக்கும் சின்னம்மையார்க்கும் மகவாகத்
தோன்றிய இராமலிங்கர், தமையனார் சபாபதிப்
பிள்ளையால் வளர்க்கப் பெற்றார். பண்டை
நற்றவத்தால் தோன்றிப் பரமனைப் பத்திபண்ணும் தொண்டராகிய இராமலிங்கர்க்குச்
செந்தமிழ்க்கடவுளாகிய முருகப்பெருமானது திருவருட்காட்சி
இளமையிலேயே கிடைத்தது. முருகப்பெருமானையே குருவாகப்
பெற்ற இராமலிங்கர் செந்தமிழும் வடமொழியும் ஆகிய
கலைநூல்களை ஓதாதுணரும் அருள்ஞானம் கைவரப் பெற்றார்.
உலகங்கள் எல்லாவற்றையும் இயக்கியருளும் முழுமுதற்
பொருளாகிய கடவுள், அண்டங்களுக்கு அப்பாலும்
அண்டங்களின் உள்ளும் மன்னுயிர்களின் அகத்திலும் சுடர்
விட்டு விளங்கும் சோதியாகத் திகழ்கின்றார் எனவும்
திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்கர் பாடியருளிய திருவருட்பாத்திருப்பாடல்கள் ஆறுதிருமுறைகளாக வகுக்கப் பெற்றுள்ளன. அவற்றில் அமைந்த திருப்பாடல்களின் தொகை 5818 ஆகும். இவையன்றி அடிகளார் அவ்வப்பொழுது தம் நண்பர்களுக்குக் கடிதமாகவும் சிறப்புப் பாயிரமாகவும் எழுதிய தனிப்பாடல்களும் பலவுள. எல்லாம்வல்ல அருட் பெருஞ்சோதி ஆண்டவனை நோக்கி உலகமக்கள் அனைவரும் நாள்தோறும் வேண்டிப் போற்றும் நிலையில் உரை நடை வேண்டுகோளாக அமைந்தவை 1. சுத்த சன்மார்க்கச் சத்தியச் சிறு விண்ணப்பம், 2.சுத்த சன்மார்க்கச் சத்தியப்பெரு விண்ணப்பம், 3.சமரச சுத்த சன்மார்க்கச் சத்திய ஞான விண்ணப்பம், 4.சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய ஞான விண்ணப்பம் என்பனவாகும்.1.மனு முறை கண்ட வாசகம், 2.சீவகாருணிய ஒழுக்கம் என்பன அடிகளார் இயற்றிய உரை நடை நூல்கள். தமிழ் என்ற சொல்லுக்கு வரைந்த உரையும் சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணத்தின் முதலாந்திருப் பாடலில் அமைந்த உலகெலாம் என்ற தொடர்க்கு வரைந்த விளக்கவுரையும் தொண்ட மண்டல சதகத்தின் நூற் பெயரிலக்கணமும், கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு எழுதிய விளக்கவுரையும், பொன் வண்ணத்தந்தாதியின் இருபத்திரண்டாம் பாடலுக்கு வரைந்த விளக்கவுரையும், வேதாந்ததேசிகரின் குறட்பா வொன்றினுக்கு வரைந்தவுரையும், அடிகளாரது விரிவுரைத்திறத்திற்கு இலக்கியமாக அமைந்துள்ளன. ஒழிவிலொடுக்கம், தொண்டமண்டல சதகம், சின்மயதீ பிகை என்பன அடிகளாராற் பதிப்பிக்கப் பெற்ற நூல்களாகும். இவ்வாறு இராமலிங்க அடிகளார் தம் உரைத் திறத்தாலும் பாட்டின் திறத்தாலும் தமிழுக்குச் செய்த அரும்பணிகள் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளாய் பெற்றுள்ள சென்ற காலத்தின் பழுதிலாத் திறத்தினையும் இனி எதிர் காலத்திற் பெறவிருக்கும் சிறப்புக்களையும் புலப்படுத்தும் முறையில் அமைந்துள்ளமை காணலாம்.
பாரத நாட்டின் முன்னேற்றத்தில் நிறைந்த ஆர்வமுடையராய்த் தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழர் பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இயல்வனவெல்லாம் செய்து வரும் செந்தமிழ்ப் பேரன்பரும் திருவருட் பிரகாச வள்ளலார் கண்ட ஆன்மநேய ஒருமையினை வளர்க்கும் உலக வொருமைச் சமயமாகிய சமரச சன்மார்க்க நெறியினை வெளிநாட்டாரும் உணர்ந்து பயன் பெறவேண்டும் என்னும் விரிந்த நோக்குடன் இராமலிங்கர் பணிமன்றத்தை நிறுவி தமிழுக்கும் தமிழினத்துக்கும் ஆக்கந்தரும் பணிகளை அன்புடன் செய்து வருபவரும் தமிழகத்தின் தொழில் முதல்வர்களுள் ஒருவரும் ஆகிய திருவாளர் நா. மகாலிங்கம் பி. எஸ்சி. அவர்கள் அடிகளால் நிறுவப்பெற்ற வடலூர் சத்திய ஞான சபையின் நூற்றாண்டு விழா ஆண்டில் தவத்திரு ஊரனடிகளார் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு திருவருட்பா ஆறு திருமுறைகளையும் திருந்திய பதிப்பாக வெளியிட்டுதவினார்கள். தேனினும் இனிய இத் திருவருட்பாப் பாடலின் செம்பொருள் நுட்பங்களைத் தமிழிலக்கண இலக்கிய வரம்பினை யுளங்கொண்டு நுண்ணிதின் ஆராய்ந்து வெளிப்படுத்தும் முறையில் திருவருட்பாவுக்கு உரைகாணும் திட்டமொன்று இவர்களால் வகுக்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறையில் அமர்ந்து ஞானாமிர்தம் சிவஞானபோதம் ஆகிய சைவ சித்தாந்த நூல்களை அரிய ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் பதிப்பித்தும் சைவ இலக்கிய வரலாறு வரைந்தும் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை முதலிய சங்கவிலக்கியங்களுக்குச் சிறந்த முறையில் விரிவுரை கண்டும் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்தும் உரைவேந்தர் என்னும் பெரும் புகழ் பெற்ற பேராசிரியர், சித்தாந்த கலாநிதி, ஒளவை சு. துரைசாமிபிள்ளை அவர்களே திருவருட்பா விரிவுரைப் பணியைச் சிறப்பாகச் செய்து முடிக்கத் தக்கவர் எனத் தேர்ந்து அவர்களைக் கொண்டு கோவை சக்தி அறநிலையத்தின் சார்பில் திருவருட்பா முழுவதற்கும் விளக்கவுரை காணச்செய்தார்கள். தட்டச்சில் எண்ணாயிரம் பக்கங்களைக் கொண்ட இவ்விரிவுரை தண்ணார் தமிழ் வளர்க்கும் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தின் சார்பில் வெளிவருதலே பொருத்தமுடையது என எண்ணிய திருவாளர் நா. மகாலிங்கம் அவர்கள் இவ்வுரைப்படிகளை அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தர் செட்டி நாட்டரசர் டாக்டர் ராஜாசர் முத்தையாச் செட்டியார் அவர்களிடம் அன்புடன் தந்தார்கள். ஞான முண்டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே என்னும் உயர்ந்த நோக்குடன் பெரும் பொருட் செலவில் சிறந்த முறையில் உருவாகிய திருவருட்பா விரிவுரையினை வெளியிடும் பொறுப்பினை உவப்புடன் ஏற்றுக் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தன் பொன்விழா நன்னாளில் திருவருட்பா விரிவுரையின் முதற்பகுதியினை வெளியிட்டு மகிழ்கின்றது.
கல்வியிற் சிறந்த கம்பர் இயற்றிய செந்தமிழ்க் காப்பியமாகிய இராமாயணத்தினை ஆராய்ந்து அனைத்துப்பாட வேறுபாடுகளோடும் விளக்கவுரைகளோடும் வெளியிடும் பணியினை மேற்கொண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அதன் முதற்பகுதியினை வெள்ளிவிழாவில் வெளியிடத் தொடங்கிப் பதினாறு தொகுதிகளாகத் திருந்திய முறையில் விரைந்து வெளியிட்டுதவிய புலமைப்பணியினைத் தமிழுலகம் நன்குணரும். அவ்வாறே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டில் தொடங்கப் பெற்று வெளிவரும் இத் திருவருட்பா விரிவுரை பலதொகுதிகளாகத் தொடர்ந்து வெளியிடப்பெற்று இனிது நிறைவேறும் என்பது இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத் தகுவதாகும். சாதிமத வேறுபாடற்ற சமுதாய அமைப்பினை உருவாக்கி உலகமக்களிடையே ஒருமையுணர்வினை வளர்க்கும் ஆற்றல் வாய்ந்த திருவருட்பா வெளியீட்டுக்கு இந்தியப் பேரரசும் தமிழக அரசும் பெரும்பொருள் வழங்கி ஆதரித்தல் வேண்டும் என்பது பல்கலைக் கழகத்தின் வேண்டுகோளாகும்.
திருவருட்பா விரிவுரையினை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு அன்புடன் உதவிய தமிழகத் தொழில் முதல்வர் திரு நா. மகாலிங்கம் பி.எஸ்சி., அவர்கட்கும் பல்கலைக்கழகத்தின் சார்பில் செந்தமிழ்ப் பணிகள் இனிது நிகழ உறுதுணையாகவிருந்து ஆக்கமும் ஊக்கமும் நல்கி ஆதரித்து வரும் பல்கலைக்கழக இணைவேந்தர், செட்டிநாட்டரசர், டாக்டர், ராஜாசர் முத்தையாச் செட்டியார் அவர்களுக்கும் துணைவேந்தர் நீதிபதி திரு. வ. சொ. சோமசுந்தரம் B.A; B.L., அவர்களுக்கும் தமிழ் மக்களின் பாராட்டும் நன்றியும் என்றும் உரியனவாகும்.
இந்நூலின் திருத்தப்படிகளை ஒப்பு நோக்கும் பணியினை இனிது நிறைவேற்றிய திருக்குறளாராய்ச்சித்துறை விரிவுரையாளர்கள் திரு. கா. ம. வேங்கடராமையா திரு சிவ.இராசேந்திரபாரதி ஆகிய இருவர்க்கும் பல்கலைக்கழகத்தின் நன்றியுரியதாகும். இந்நூலை வனப்புற அச்சிட்டுதவிய சிதம்பரம் அழகு அச்சகத்தாரது பணி நமது பாராட்டுக் குரியதாகும்.